பீகாரில் போச்சான் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மக்கள்தான் எஜமான் என்று கூறியுள்ளார்.
போச்சான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முசாபிர் பாஸ்வான் மறைந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தரப்பில் முசாபிர் பாஸ்வான் மகன் அமர் பாஸ்வான் நிறுத்தப்பட்டார். இவர் கடந்த மாதம்தான் தனது விகாசீல் இன்சான் கட்சியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தார்.
தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு 82,562 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கீதா குமார் 45,909 வாக்குகள் பெற்று 36,658 வாக்குகள் வித்திசாயத்தில் தோல்வி அடைந்தார்.
இதையும் படிங்க - மேற்கு வங்கத்தில் சட்டமன்ற, மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சி கூட்டணி தோல்வி அடைந்திருப்பது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோல்விக்கான காரணம் குறித்து நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி விளக்கம் பெற முயன்றனர். இதற்கு 'மக்கள்தான் எஜமான்' என்று ஒரே வரியில் நிதிஷ் பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க - அசாமில் கடும் மழை வெள்ளம் - 20,000 பேர் பாதிப்பு, 8 பேர் உயிரிழப்பு
ராஷ்டிரிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் மிரிதியுஞ்செய் திவாரி கூறுகையில், 'இடைத்தேர்தல் வெற்றி எங்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. மாநிலத்தில் மீண்டும் சக்திவாய்ந்த கட்சியாக ஆர்ஜேடி உருவெடுக்கும். அடுத்ததாக தேஜஸ்வி யாதவை முதலமைச்சராக்குவதற்காக நாங்கள் பணியாற்றுவோம்' என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.