Mucormycosis : மிரட்டும் கருப்பு பூஞ்சை: 3 வாரத்தில் மட்டும் 2,100 பேர் பலி.. 150% ஆக உயர்ந்த பாதிப்பு!

கருப்பு பூஞ்சை

நாட்டிலேயே அதிகளவாக மகாராஷ்டிர மாநிலத்தில் 7,057 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 609 உயிரிழப்புகளும் அங்கு ஏற்பட்டிருக்கிறது.

  • Share this:
கருப்பு பூஞ்சை நோய்க்கு கடந்த 3 வாரங்களில் மட்டும் 2,100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பததாக தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் நீடித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இரண்டாம் அலை கொரோனா பரவல் கொடூரமாக பரவி பாதிப்பையும், உயிரிழப்பையும் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. இது ஒரு புறம் என்றால் கொரோனா பாதித்தவர்களிடையே கண்டறியப்பட்ட mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் நாட்டின் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் புதிய சவாலை ஏற்படுத்தியது.

கருப்பு பூஞ்சை நோயானது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களிடையே கண்டறியப்பட்டு வருகிறது, மேலும் இந்நோயினால் பாதிக்கப்படுவோர் தொடர்ந்து உயிரிழப்பை சந்தித்து வருவதால் மருத்துவத் துறையினர் புதிய சவாலை எதிர்கொண்டுள்ளனர்.

இதுவரையில் நாடு முழுவதும் 31,216 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 3 வாரங்களில் மட்டும் சிகிச்சை பலனின்றி 2109 பேர் உயிரிழந்திருப்பது இந்நோய் மீதான அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 3 வாரத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 150% அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

Also Read:   60 வயது நபரின் மூளையிலிருந்து கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை அகற்றம்!

கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்கு உதவும் Amphotericin-B என்ற மருந்துக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டிலேயே அதிகளவாக மகாராஷ்டிர மாநிலத்தில் 7,057 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 609 உயிரிழப்புகளும் அங்கு ஏற்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத் (5418 பேர் பாதிப்பு; 323 பேர் பலி) மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாதிப்பை பொறுத்தவரையில் ராஜஸ்தான் (2976 பேர்) 3வது இடத்திலும், உயிரிழப்பில் கர்நாடகா (188 பலி) 3வது இடத்திலும் உள்ளன.

கடந்த மே25ம் தேதி மகாராஷ்டிராவில் 2770 பேரும், குஜராத்தில் 2859 பேரும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல மே 25ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் 701 பேரும், டெல்லியில் 119 பேரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் 1744 பேர் பாதிப்பும், 142 பேர் உயிரிழந்திருக்கின்றனர். டெல்லியில் 1200 பேர் பாதிக்கப்பட்டும், 120 பேர் உயிரிழப்பையும் சந்தித்திருக்கின்றனர்.

கொரோனா சிகிச்சையின் போது பயன்படுத்தும் வீரியமிக்க மருந்துகள் காரணமாக கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு பரவிவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த 60 வயது ஆன நபர் ஒருவரின் மூளையில் இருந்து கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை அகற்றப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜமூய் பகுதியைச் சேர்ந்த அனில் குமார் (வயது 60) என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சில நாட்களாகவே அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக அவர் IGIMS மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு மூளையில் இருப்பது கண்டறியப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து மருத்துவர் மனிஷ் மண்டல் என்பவர் அனில் குமாருக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சையை அகற்றியுள்ளார். இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் மனிஷ் கூறுகையில், அனில் குமாருக்கு மூக்கின் வழியாக கருப்பு பூஞ்சை மூளைக்கு சென்றிருக்கிறது. நல்ல வேளையாக அவரின் கண்களுக்கு அது பரவவில்லை. இது போல பாதிக்கப்பட்ட பலருக்கும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் கண்கள் நீக்கப்பட்டது என கூறினார்.
Published by:Arun
First published: