சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வராக பூபேஷ் பாகல் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனையடுத்து ஆங்கில ஊடகம் ஒன்று அவரை பேட்டி கண்டது அதில் பாஜகவின் இந்துத்துவா அரசியல், கொள்கை வெளிநாட்டு இறக்குமதியாகும் என்று விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் ராகுல் காந்தி இந்து என்பதற்கும் இந்துத்துவா வாதிக்கும் இடையிலான வேறுபாட்டை மையப்படுத்தி பேசினார். ஒரு உண்மையான இந்து சத்யத்தைத் தேடித்தான் செல்வான், ஆனால் இந்துத்துவா வாதி அதிகாரத்தைத் தேடித்தான் செல்வான் என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்தி மேலும் கூறும்போது, மகாத்மா காந்தியும் இந்துதான், கோட்சேவும் இந்துதான் ஆனால் காந்தி அகிம்சையின் உருவம் கோட்சேவோ வெறுப்பு உமிழும் இந்துத்துவா வாதி. இந்து என்றால் உலக அமைதியை நாடுபவன். ஆனால் இந்துத்துவா வாதி பிறரைக் கண்டு பயத்தில் அவர்கள் மீது வன்முறையைச் செலுத்துபவன் என்று கூறிய ராகுல் காந்தி இந்தியா இந்துக்களின் நாடு, இந்துத்துவா வாதிகளின் நாடு அல்ல என்றார். இந்த சூழலில் ராகுல் காந்தி கூறியதை ஊடகங்கள் குறிப்பாக மின்னணு ஊடகங்கள் திரித்து ராகுல் காந்தி இந்தியா இந்து தேசம் என்று கூறிவிட்டதாக செய்தி வாசித்தன.
இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த நிலைப்பாடு குறித்து ஊடகம் ஒன்று கேள்வி எழுப்ப அதற்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் பதிலளிக்கையில், “ராகுல் காந்தி இந்துத்துவா வாதிகளையும் இந்துக்களையும் பிரித்துப் பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
பாஜக பின் பற்றும் கொள்கைகள் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை, அங்கிருந்து தாக்கம் பெற்றவை. உதாரணமாக ஆர்.எஸ்.எஸ்.-ஜ் காக்கி பேண்ட், தொப்பி, பேண்ட் ஆகியவற்றைப் பாருங்கள். இவை இந்தியச் சீருடைகளா? அல்லது அது இந்திய இசையா?
காங்கிரஸில் நாங்கள் இந்தியக் கலாச்சாரத்தையும் மரபையும் பின்பற்றுகிறோம். பாஜக அரசியல் கொள்கை வன்முறை, வெறுப்பு அரசியல்தான். யாரெல்லாம் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்கள் மீது வெறுப்பைக் கக்குவது. எவ்வளவோ படையெடுப்புகளைக் கண்ட இந்த இந்திய மரபு பல தாக்குதல்களையும் மீறியும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நின்றுள்ளது.
இந்த அமைப்பு அனைத்து தாக்குதல்களையும் உறிஞ்சிவிடும். காங்கிரஸ் அந்த மரபைத்தான் பின்பற்றுகிறது” என்றார் பூபேஷ் பாகெல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chattisgarh, Congress, Hindu