திரிபுராவில் ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்கள், காவல் நிலையத்தினுள் புகுந்து சரமாரியாக தாக்கியதாக திரிணாமுல் காங்கிரஸார் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தனது கட்சியை மேற்குவங்கம் கடந்தும் விஸ்தரிக்கும் பணியில் மும்முரமாக களமிறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக திரிபுரா மற்றும் கோவா மாநிலங்களின் மீது அக்கட்சி கண் வைத்துள்ளது. குறிப்பாக அண்டை மாநிலமான திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், 2023 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் காய்நகர்த்தி வருகிறது.
இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட முடிவெடுத்திருக்கிறது. அங்கு வரும் நவம்பர் 25ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதன் முடிவு ந்வம்பர் 28 அன்று வெளியாகும்.
BJP - TMC மோதல் :
இதனிடையே கடந்த நவம்பர் 19ஆம் தேதியன்று திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கோவாய் மாவட்டத்தின் கலிடில்லா பகுதியில் பாஜகவினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் இரண்டு போலீசார் உட்பட 19 பேர் காயமடைந்தனர். கலவரம் காரணமாக தெலியமுரா நகராட்சி பகுதியில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் தற்போது மேலும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
Also read:
‘ஐஎன்எஸ் விசாகப்பட்டணம்’ போர்க்கப்பல் மூலம் சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் இந்தியா
திரிபுராவின் அகர்தலாவில் உள்ள காவல்நிலையம் ஒன்றினுள் புகுந்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை, பாஜகவினர் தாக்கியதாக திரிணாமுல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. எனினும் இதற்கு பாஜக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின்படி, “திரிணாமுல் தலைவர் சாயோனி கோஷ், குனால் கோஷ் ஆகியோர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த காவல்துறையினர், விசாரிக்க வேண்டும் என கூறி அகர்த்தலா கிழக்கு காவல்நிலையத்துக்கு வரச்சொல்லியிருக்கின்றனர். ஆனால் என்ன வழக்கு என்பது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கவில்லை எனவும் பின்னர் கட்சித் தலைவர்கள், தொண்டர்களுடன் அங்கு சென்றதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Also read:
ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு அனுமதி மறுப்பு - SBI கூறும் விளக்கம்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மேற்கண்ட காவல்நிலையத்துக்கு சென்ற போது, அங்கு ஹெல்மெட் அணிந்திருந்த பாஜக தொண்டர்கள் கைகளில் கட்டைகளுடன் காவல்நிலையத்துக்கு உள்ளே வந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதாக கூறுகின்றனர். இதில் சில திரிணாமுல் தொண்டர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததாக கூறப்படும் திரிணாமுல் தலைவர் குனால் கோஷ், திரிபுராவில் நடைபெறுவது காட்டு ஆட்சி. எங்களை போலீஸ் நிலையத்தில் புகுந்து பாஜகவின் அடித்தனர். போலீசார் நாங்கள் அடிபட்டதை வேடிக்கை பார்த்தனர். ஆனால் அதற்கு நேரெதிராக எங்கள் மீதே வழக்கு போட்டுள்ளனர் என்றார்.
திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பேனர்ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் ரத்தம் வடிந்த நிலையில் பேசுவதையும், அங்கே போலீசார் நின்றிருக்கும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்து பிப்லாப் தேபின் காட்டு தர்பாரில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூட காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின் கீழ் மக்களாட்சி கேலிக்குரியதாக மாறியிருக்கிறது என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.