குஜாரத் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதலமைச்சராக தற்போது பூபேந்திர படேல் உள்ளார். இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து அங்கு அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 182 சட்டப்பேரை தொகுதிகளுக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் வெற்றிக்காக ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத். எனவே, அங்கு சிறப்பான வெற்றியை பெற வேண்டும் என்பதை பாஜக தனது கவுரவ பிரச்னையாக பார்க்கிறது. எனவே, முன்னணி பாஜக தலைவர்கள் அனைவரும் தொடர்ந்து தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள கேடா மாவட்டத்தில் உள்ள மஹூதா நகரில் அமித் ஷா நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், "1995ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் குஜராத்தில் மதக் கலவரம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. மதம் மற்றும் சாதிகளுக்கு இடையே காங்கிரஸ் மோதலை வளர்த்து அதன் மூலம் வாக்கு வங்கி அரசியல் செய்து லாபம் பார்த்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த செயலால் பெரும்பான்மையான மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கெஜ்ரிவாலை கொலை செய்ய சதித்திட்டம்.. பாஜக தலைவரை கைது செய்ய ஆம் ஆத்மி கோரிக்கை!
இந்த தொகுதியில் கூட பல முறை கலவரம், வன்முறை, ஊரடங்கு நிலவிய சம்பவங்கள் உள்ளன. கலவரமான சூழலில் குஜராத் மாநிலம் வளர்ச்சி என்ற வாய்ப்பை பெறாமல் இருந்தது. 2002ஆம் ஆண்டிலும் இது போன்ற கலவரத்தை உருவாக்க அவர்கள் நினைத்தார்கள்.
ஆனால், அன்றைய பாஜக அரசோ கலவரகாரர்களுக்கு தக்க பாடம் புகட்டியது, அவர்களை சிறையில் அடைத்தது. அதன் பின்னர் 22 ஆண்டுகளில் மாநிலத்தில் ஊரடங்கு போட வேண்டிய தேவையே ஏற்படவில்லை. தொடர் மோதல்களை பார்த்த குஜராத் மாநிலத்தில் அமைதி கொண்டு வர பாஜக அரசு பெறும் பங்காற்றியது" என்றார்.
2002ஆம் ஆண்டில் நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரும் கலவரமும் வெடித்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, Gujarat, Home Minister Amit shah