மேற்குவங்கத்தில் பாஜக ஆதரவாளரின் மனைவி படுகொலை! - திரிணாமுல் காங்கிரஸார் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

பாஜக ஆதரவாளரின் மனைவி படுகொலை

மேற்குவங்கத்தில் இன்று காலை 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்க சிறிது நேரத்திற்கு முன்னர் பாஜக தொண்டரின் மனைவி படுகொலை செய்யப்பட்டதால் அதிர்ச்சி.

  • Share this:
மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் களம் மிகவும் கொந்தளிப்பாக பார்க்கப்படுவதால் அங்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.
தமிழகம், பாண்டிச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாகவும், அசாமில் மூன்று கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகம், கேரளா மற்றும் புதுவையில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அசாமில் 3ம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவும், மேற்குவங்கத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே மேற்குவங்கத்தின் பதற்றம் நிறைந்த கோகாத் மாவட்டத்தின் கோகாத் பகுதியானது 3ம் கட்ட வாக்குப்பதிவின் கீழ் வரும் பகுதியாகும். இந்நிலையில் அங்கு நேற்றிரவு 11 மணியளவில் பாஜக தொண்டர் ஒருவர் மீதான கொலைவெறித் தாக்குதலில் அதனை தடுக்க முற்பட்ட அவருடைய மனைவி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு பாஜக ஆதரவாளர் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென பாஜக ஆதரவாளரை கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி மாதபி அதக், தனது கணவரை காப்பாற்றுவதற்காக நடுவில் வந்தார். இருப்பினும் மாதபி அதக் மீது அவர்கள் கண்மூடித்தனமான தாக்குதலை அரங்கேற்றியிருக்கின்றனர். இதில் பலத்த காயமடைந்த மாதபி அதக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மர்ம நபர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக பாஜக சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் அரங்கேற்றப்பட்டது என்று உயிரிழந்த மாதபியின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்க சில மணி நேரத்திற்கு முன்னதாக நடந்த இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Arun
First published: