வாட்ஸ்ஆப் மூலம் பாஜக மக்கள் மத்தியில் பொய்களை பரப்பி வருவதாகவும், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கான ஆதாரத்தை கேட்பதில் என்ன தவறு உள்ளது என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியுள்ளார்.
ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சந்திரசேகர ராவ் கூறியதாவது-
விவசாயிகள் விரும்பாத வேளாண் புதிய சட்டங்களை எதற்காக பாஜக கொண்டு வந்தது? போராட்டத்தின்போது பலர் உயிரிழந்தனர். சட்டங்களை திரும்பப் பெற்ற பின்னர், பாஜக ஏன் விவசாயிகளிடத்தில் மன்னிப்பு கேட்கவில்லை?
வாட்ஸ்ஆப் மூலம் பொய்களை பாஜக பரப்புகிறது. மத சார்ந்த நம்பிக்கைகள் மற்றொரு தரப்பினருக்கு எதிராக நாடு முழுவதும் தூண்டப்படுகிறது. இவை எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.
இதையும் படிங்க -
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு... நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் கவுண்டர்களில் விநியோகம்
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கான ஆதாரங்களை ராகுல் காந்தி கேட்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது? நானும் கூட அதைக் கேட்கிறேன். தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் எங்கே?
ராகுல் காந்தியின் தந்தை கொல்லப்பட்டார். பாட்டி கொல்லப்பட்டார். அவருடைய தாத்தா நேரு நாட்டிற்காக சிறை சென்றார். அசாம் பாஜக முதல்வரால் இதுபோன்று சொல்லிக் கொள்வதற்கு ஏதேனும் இருக்கிறதா?
தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். 2024 -ல் பாஜக அல்லாத அரசு அமையுமா அல்லது காங்கிரஸ் அல்லாத அரசு அமையுமா என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் மக்கள் நலன் சார்ந்த அரசு அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க -
PSLV C-52 ராக்கெட் மூலம் 3 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது இஸ்ரோ...
2016-ல் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், 2019-ல் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த ஆதாரங்களை ராகுல் காந்தி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, நீங்கள் ராஜீவ் காந்தியின் மகனா இல்லையா என்பதற்கு நாங்கள் எப்போதாவது ராகுலிடம் ஆதாரம் கேட்டிருக்கிறோமா? என்று கூறியிருந்தார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து சந்திர சேகர ராவ் பதில் அளித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.