ரபேல் விவகாரத்தில் பிரதமரை திருடர் எனக் குறிப்பிட்டதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் பரப்புரையின் போது, ரபேல் விவகாரத்தை முன்வைத்து ராகுல்காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது "சவ்கிதார் கே சோர் ஹை" அதாவது காவலரே திருடர் என பிரதமர் மோடியை விமர்சித்து வந்தார்.
இதற்காக உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டார். இந்தநிலையில், ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நற்சான்றிதழ் வழங்கியது.
இந்நிலையில்தான், பிரதமரை திருடர் என விமர்சித்த ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், அப்பகுதியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை கிழித்தெறிந்தனர்.
டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாஜகவினர், இன்று ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ரபேல் விவகாரத்தில் பிரதமர் குறித்து அவதூறாக பேசியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டிச் செல்ல முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் ராகுல்காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.