குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநிலத்தை ஆளும் பாஜக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அங்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது முதலமைச்சராக அக்கட்சியின் மூத்த தலைவர் பூபேந்தர் பாடேல் உள்ளார். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, குஜராத்தில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்கு பதிவு டிசம்பர் 1ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத். எனவே, அங்கு சிறப்பான வெற்றியை பெற வேண்டும் என்பதை பாஜக தனது கவுரவ பிரச்னையாக பார்க்கிறது. எனவே, முன்னணி பாஜக தலைவர்கள் அனைவரும் தொடர்ந்து தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 2002-ல் கலவரம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டி அமைதியை கொண்டு வந்தோம் - அமித் ஷா பேச்சு
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அம்மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதி பட்டியலை இன்று வெளியிட்டார். அதில், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு தரமான இலவச கல்வி திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. கேஜி வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கி மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் எனவும், நாட்டில் அச்சுறுத்தும் சக்திகள், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஆகியவற்றை அடையாளம் காண தனிக்குழு ஒன்றை அமைப்போம் என்று வாக்குறுதியில் கூறியுள்ளது. மேலும் மாநிலத்தில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.