பாஜக எம்.எல்.ஏ மீது பஞ்சாப் விவசாயிகள் தாக்குதல்.. ஆடைகளை கிழித்து எறிந்தனர்.. கட்சி அலுவலகம் சூறையாடல்!

எம்.எல்.ஏ மீது பஞ்சாப் விவசாயிகள் தாக்குதல்

பஞ்சாபில் விவசாய போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவரை விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சூழ்ந்து தாக்கி அவருடைய ஆடைகளை கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மாதக்கணக்கில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானாவில் தான் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் அபோகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏவான அருண் நரங், மலவுட் பகுதியில் நடைபெற்ற பத்ரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட போது அங்கு திரண்டிருந்த விவசாயிகள் எம்.எல்.ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்

அந்த இடத்தில் நிலைமை மோசமாவதை உணர்ந்த காவல்துறையினர் எம்.எல்.ஏவை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். அந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென எம்.எல்.ஏ அருண் நரங்கை சூழ்ந்து கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த களேபரத்தில் அவரின் ஆடைகள் கிழிக்கப்பட்டன. கட்சி அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

இதனிடையே அருகிலிருந்த கடை ஒன்றுக்கு எம்.எல்.ஏவை அழைத்துச் செல்ல முற்பட்ட போது அவரின் மீது கருப்பு மை வீசினர். அப்போது போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் கடைக்குள் வைத்து எம்.எல்.ஏவை பாதுகாப்புக்காக பூட்டினர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் இவ்வாறு நடத்தப்பட்டார் என்பது வருந்தத்தக்க விஷயம். அத்தகைய நடத்தையை நாங்கள் ஊக்குவிப்பதில்லை. இந்த செயலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என்று சம்யுக்தா கிசான் மோர்சா என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் அறிக்கை வெளியிட்டார். மேலும் விவசாயிகள் அமைதியை காக்க வேண்டும், கன்னியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.இதனிடையே பாஜக எம்.எல்.ஏ மீதான தாக்குதலை பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கண்டித்துள்ளார், மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசாங்கத்தை அவதூறாக பேசியதோடு, அது "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கின் முழுமையான சரிவை அம்பலப்படுத்தியுள்ளது" என்றார்.
Published by:Arun
First published: