பாஜக இந்த நாட்டைச் சுடுகாடாக்கிவிட்டது. அதேபோன்று மேற்கு வங்க மாநிலத்தைச் சுடுகாடாக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாக தாக்கிப் பேசியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் திரிணமூல் காங்கிரஸ் முயன்று வருகிறது. பாஜக ஆட்சியைப் பிடிக்க கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பூர்வ வர்த்தமான் மாவட்டத்தில் உள்ள கல்னாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மம்தா பேசும்போது, “திரிணமூல் காங்கிரஸ் நலனுக்காகச் சிந்திக்காதவர்கள், கட்சியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில மோசமான மாடுகள் தங்கள் தவறுகளை மறைப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிவிட்டன. அந்தக் கெட்ட சக்திகள் வெளியேறியது நல்லதுதான்.
போராடும் விவசாயிகளுக்கு எதிராக ஆளும் பாஜக அரசு அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இந்து மதம் பற்றி பொய்களைப் பரப்புகிறது பாஜக, நாங்கள் மதத்தின் பெயரால் நாட்டைப் பிளவு படுத்த மாட்டோம்.
ஒரு தாய் தனது குழந்தைகளுக்குப் பாலூட்டி, உணவு கொடுத்து அவர்களை வளர்த்தார். ஆனால், அந்தத் தாய் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோது, அவருக்குத் தேவையானபோது, அவருடன் இல்லாமல் பறந்து சென்ற குழந்தைகள் நல்ல குழந்தைகள் அல்ல. துரோகம் செய்த குழந்தைகள்.
இந்திய தேசத்தைச் சுடுகாடாக பாஜக அரசு மாற்றிவிட்டது. இனிமேல் மேற்கு வங்கத்தையும் அதேபோன்று மாற்ற முயல்கிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தைச் சுடுகாடாக மாற்ற அனுமதிக்க மாட்டேன்.
பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் வெளியே செல்வதற்கான கதவுகளை மக்கள் திறந்து விடுவார்கள் என்று நம்புகிறேன் இவ்வாறு பேசினார் மம்தா பானர்ஜி.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல்-மே-யில் நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.