கேரளாவில் 2 தொகுதிகளில் முன்னிலை பெறும் பாஜக!.. சுரேஷ் கோபி 2ம் இடம்!

கேரளாவில் 2 தொகுதிகளில் முன்னிலை பெறும் பாஜக!.. சுரேஷ் கோபி 2ம் இடம்!

பா.ஜ.க

திருச்சூர் தொகுதியில் ஆரம்ப கட்டத்தில் முன்னிலை பெற்ற பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி தற்போது 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

  • Share this:
கேரள சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த முறை ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, தற்போது இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கேரளாவின் ஒரே ஒரு பாஜக எம்.எல்.ஏவாக இருந்து வருபவர் ஒ.ராஜகோபால். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள நேமம் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ராஜகோபால் 8,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே நேமம் தொகுதியை கேரளாவில் குஜராத் என்று செல்லமாக அழைக்கின்றனர்.

இந்த நிலையில் 2021 கேரள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பாஜக, இந்தியாவின் ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரனை களமிறக்கியது. கடந்த தேர்தலில் கிடைத்த ஒரு தொகுதி என்ற எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டுமென்ற முனைப்புடன் அக்கட்சி தீவிரமாக செயல்பட்டது.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் சிபிஎம் மீண்டும் கேரளாவில் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகி இருக்கிறது. காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் என மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில் தொடர்ந்து 2வது முறையாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அங்கு ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.

140 இடங்களை கொண்ட கேரள சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற 71 இடங்கள் தேவை என்ற நிலையில், சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 94 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக இரண்டு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த முறை பாஜக வெற்றி பெற்ற நேமம் தொகுதியில் இந்த முறையும் பாஜக தனது ஆதிக்கத்தை காட்டி வருகிறது. நேமத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் முன்னிலை பெற்றுள்ளார். இருப்பினும் அவர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலை பெற்றுள்ளார்.

இதே போல பாலக்காடு தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

திருச்சூர் தொகுதியில் ஆரம்ப கட்டத்தில் முன்னிலை பெற்ற பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி தற்போது 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மஞ்சேஸ்வரம் தொகுதியில் கூட பாஜக வேட்பாளர் சுரேந்திரன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 300 - 400 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே 2ம் இடம் வகிக்கிறார்.

நேமம், திருச்சூர், பாலக்காடு, கேரளா, கேரள சட்டமன்ற தேர்தல், சுரேஷ் கோபி, மெட்ரோ மேன் ஸ்ரீதரன், கும்மணம் ராஜசேகரன்
Published by:Arun
First published: