மத்திய அமைச்சராகிறார் பா.ஜ.க தலைவர் எல்.முருகன்- அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு

எல்.முருகன்

மத்திய அமைச்சராக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பதவியேற்கவுள்ளார். அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 • Share this:
  பிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டு மே மாதம் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த பா.ஜ.க அமைச்சரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு கேபினட் அமைச்சருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம், கிராமப் புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், உணவு பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளார். மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாந்த், ‘சட்டம் மற்றும் நீதி, தொலைதொடர்பு, தகவல்தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளார்.

  அதேபோல, ஹர்ஷவர்த்தன், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோரும் மூன்று துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளனர். அதேபோல, மத்திய விவசாயத்துறை அமைச்சராக இருந்த அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்ஷிம்ரத் கவுர் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த பிறகு, அனைத்து அமைச்சர்களும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருந்துவருகிறது. எனவே, மத்திய அமைச்சரவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கு வசதியாக இன்று ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷவர்த்தன் உள்ளிட்ட 8 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தற்போது, மத்திய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

  முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்.முருகன் பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்காக டெல்லியில் இருக்கும் எல்.முருகன் இன்று காலையிலேயே டெல்லியிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று பூஜை செய்தார் என்று தகவல்கள் வந்துள்ளன.

  இன்று ஏற்கெனவே மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் மற்றும் புதிய அமைச்சர்கள் என்று 43 பேர் பதவியேற்கவுள்ளனர்.

  பதவியேற்கவுள்ளவர்கள் பெயர் பட்டியல்:

  அமைச்சர்கள் பட்டியல்


  அமைச்சர்கள் பட்டியல்
  Published by:Karthick S
  First published: