நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும்
பாஜக கூட்டணியில் எந்த வித விரிசலும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது இதை அமித் ஷா தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனதாதளத்தை விட அதிக எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு இருந்தாலும் சிறந்த நிர்வாகி என்ற அறியப்படும் நிதீஷ் குமாரையே முதலமைச்சராக கூட்டணி கட்சியான பாஜக முன்னிறுத்தி தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. இருப்பினும் பல்வேறு விவகாரங்களில் ஐக்கிய ஜனதாதளத்திற்கும் பாஜகவுக்கும் உரசல் போக்கு நிலவிவருகிறது.
மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு, அக்னிபத் திட்டம் மற்றும் அது சார்ந்த போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில பாஜகவுக்கும், நிதீஷ் குமார் கட்சிக்கும் உரசல் போக்கு வெளிப்படையாக தென்பட்டது. மேலும், இந்த சலசலப்புக்கு வலு சேர்க்கும் விதமாக மத்திய பாஜக அழைப்பு விடுத்த மூன்று நிகழ்வுகளை முதலமைச்சர் நிதீஷ் குமார் புறக்கணித்தார்.மாநில முதலமைச்சர்களுக்கான கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் நிதீஷ் குமார் பங்கேற்கவில்லை. அதேபோல், குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழா, திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரா பதவியேற்கும் விழா ஆகியவற்றையும் நிதீஷ் குமார் புறக்கணித்தார்.
நிதீஷ் குமார் இவ்வாறு முரண்டு பிடித்து வரும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பீகாரில் நடைபெற்ற கட்சி தேசிய செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய கருத்தை தெரிவித்தார். அதில், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அமைத்து தான் போட்டியிடும். இதில் எந்த குழப்பமும் இல்லை.
இதையும் படிங்க:
ஒரே குடும்பத்தில் 4 ஐஏஎஸ், ஐபிஎஸ்.. அசத்தும் சகோதர, சகோதரிகள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் தந்தை
2024 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் அவரே பிரதமராகப் போகிறார். கூட்டணி தர்மத்தை பாஜக என்றும் மதிக்கும். எனவே, இரு கட்சிக்குள் எந்த அதிகார பூசலும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாஜகவின் நிலைப்பாட்டை நிதீஷ் குமாருக்கும் மற்ற அனைவருக்கும் அமித் ஷா வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.