நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணியில் இடையே நிலவி வரும் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தை நிதீஷ் குமார் புறக்கணித்ததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனதாதளத்தை விட அதிக எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு இருந்தாலும் சிறந்த நிர்வாகி என்ற அறியப்படும் நிதீஷ் குமாரையே முதலமைச்சராக கூட்டணி கட்சியான பாஜக முன்னிறுத்தி தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. இருப்பினும் பல்வேறு விவகாரங்களில் ஐக்கிய ஜனதாதளத்திற்கும் பாஜகவுக்கும் உரசல் போக்கு நிலவிவருகிறது.
மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு, அக்னிபத் திட்டம் மற்றும் அது சார்ந்த போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில பாஜகவுக்கும், நிதீஷ் குமார் கட்சிக்கும் உரசல் போக்கு வெளிப்படையாக தென்பட்டது. மேலும், இந்த சலசலப்புக்கு வலு சேர்க்கும் விதமாக மத்திய பாஜக அழைப்பு விடுத்த மூன்று நிகழ்வுகளை முதலமைச்சர் நிதீஷ் குமார் புறக்கணித்தார். மாநில முதலமைச்சர்களுக்கான கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் நிதீஷ் குமார் பங்கேற்கவில்லை. அதேபோல், குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழா, திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரா பதவியேற்கும் விழா ஆகியவற்றையும் நிதீஷ் குமார் புறக்கணித்தார்.
இதற்கெல்லாம் உச்சமாக டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.கொரோனா தொற்றுநோய் தொடங்கிய பின் நடைபெறும் நிர்வாகக்குழுவின் முதல் நேரடி கூட்டம் இதுவாகும். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேவேளை, மத்திய பாஜக அரசு, பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூட்டத்தை புறக்கணித்தார். அதேவேளை, காங்கிரஸ் முதலமைச்சர்களான ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல் கூட இந்த கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
இந்த பின்னணியில் தான், பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவரான பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் எந்த காரணமும் கூறாமல் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இவ்வாறு மத்திய பாஜகவின் நிகழ்வுகளை நிதீஷ் குமார் தொடர்ந்து புறக்கணித்து வருவது கூட்டணிக்குள்ளான விரிசலை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.
நிதீஷ் குமாரின் கட்சி சார்பில் மத்திய பாஜக அமைச்சரவையில் அங்கம் வகித்த ஜேடியு தலைவர் ஆர்சிபி சிங்கிற்கு மாநிலங்களவை தேர்தலில் நிதீஷ் குமார் மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அமைச்சர் பதவியை வேறு வழியின்றி அவர் ராஜினாமா செய்தார். அத்தோடு நிற்காமல் அவர் ஊழலில் ஈடுபட்டதாக கூறி கட்சி மேலிடம் ஆர்சிபி சிங் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த ஆர்சிபி சிங் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விலகியுள்ளார்.ஆர்சிபி சிங் பாஜகவுடன் நெருக்கம் காட்டியதே அவர் மீதான நடவடிக்கைகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த குழப்பாமான சூழலில் தான் நிதீஷ் குமார் தனது கட்சி எம்பி, எம்எல்ஏ. எம்எல்சிக்களுக்கு கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Niti Aayog, Nitish Kumar, PM Modi