கேரளாவில் பாஜக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு - தேர்தலுக்கு முன்னரே 3 தொகுதிகளை இழந்தது பாஜக கூட்டணி!

கேரளாவில் பாஜக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு - தேர்தலுக்கு முன்னரே 3 தொகுதிகளை இழந்தது பாஜக கூட்டணி!

பாஜக

கேரளாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் மூவரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

  • Share this:
140 தொகுதிகளை கொண்ட கேரளாவில், தமிழகத்தை போலவே ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு பலம்வாய்ந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் என இரண்டு கூட்டணிகளை எதிர்த்து பாஜக 4 கட்சிகளை கட்சிகள் கொண்ட கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

இதனிடையே வேட்பு மனு பரிசீலனையின் போது தலசேரி, குருவாயூர் மற்றும் தேவிகுளம் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதில் தமிழக எல்லையை ஒட்டிய தேவிகுளம் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவின் வேட்பாளரான தனலட்சுமியின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இந்த தொகுதிகளில் டம்மி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் நெருக்கடியான நிலைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தள்ளப்பட்டது. இதனை எதிர்த்து தலசேரி வேட்பாளர் ஹரிதாஸ், குருவாயூர் வேட்பாளர் நிவேதிதா சுப்ரமணியம் மற்றும் தேவிகுளம் வேட்பாளர் தனலட்சுமி ஆகிய 3 பேரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள்


தங்களுடைய வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து 3 வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அம்மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கேரள உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது, அதில் வேட்பு மனு பரிசீலனையில் தேர்தல் அதிகாரிகளின் முடிவே இறுதியானது. 3 வேட்புமனுக்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணைய செயல்பாடுகளில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 329 B பிரிவின்படி நீதிமன்றம் தலையிட முடியாது. தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னரே நீதி விசாரணை செய்து நிவாரணம் பெற முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது. இந்த காரணங்களால் 3 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

கேரளாவில் பாஜக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே 3 தொகுதிகளை பாஜக கூட்டணி இழந்தது.

தலசேரியை பொருத்தவரை பாஜக அதிக வாக்குகளை பெற்ற தொகுதியாக விளங்குகிறது. இங்கு 2016 தேர்தலில் போட்டியிட்ட சஜீவன் 22,125 வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: