மகாராஷ்டிர தலைநகர் மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற
பாஜக சதித்திட்டம் தீட்டி வருவதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிவசேன கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விவாதிக்கப்பட்டுள்ளது. . இதற்காக கூட்டங்கள் நடத்தப்பட்டு நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இது நடந்து வருகிறது இதை முழுப்பொறுப்புடன் சொல்கிறேன். நான் சொல்வதை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் உள்ளது.
இந்த ஏற்பாடுகள் குறித்து முதல்வர் (உத்தவ் தாக்கரே) அறிந்திருக்கிறார் என்று தெரிவித்த சஞ்சய் ராவத், இந்த சதியில் பாஜகவின் முன்னாள் எம்பி கிரிட் சோமையா மற்றும் சில கட்சித் தலைவர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் அங்கம் வகிப்பதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில், மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் மராத்தி மக்களின் சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், எனவே மத்திய அரசின் ஆட்சியின் கீழ் அந்த நகரத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்றும் கூறி சோமையா தலைமையிலான குழு நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது என்றும் சஞ்சய் ராவத் குறிப்பிட்டார்.
பள்ளிகளில் மராத்தியை கட்டாய மொழியாக்கும் மாநில அரசின் முடிவை சோமையா ஏற்கனவே எதிர்த்ததாக சஞ்சய் ராவத் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.