மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்!

பாஜக வேட்பாளர் தீபக் ஹல்தார்

மேற்குவங்கத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அங்கு சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அடிக்கடி மோதல்களும், தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் சவுத் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஹரிதேப்பூர் பகுதியில் டயமண்ட் ஹார்பர் தொகுதியின் பாஜக வேட்பாளர் தீபக் ஹல்தார், அவரின் ஆதரவாளர்களுடன் இன்று காலை 9.30 மணி அளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு திரண்டு வந்த சிலருடன் வேட்பாளர் தீபக் ஹல்தாருடன் வாக்கு வாதம் ஏற்பட்டது. திடீரென வாக்குவாதம் முற்றியதில் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் பாஜக வேட்பாளர் தீபக் ஹல்தாரை நீளமான கொம்புகளால் தாக்கினர். அவரின் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது.

இந்த திடீர் தாக்குதலில் பாஜக வேட்பாளர் தீபக் ஹல்தார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 10 பேர் காயமடைந்தனர். அருகிலிருந்து அரசு மருத்துவமனை ஒன்றில் பாஜக வேட்பாளர் தீபக் ஹல்தார், அவரின் ஆதரவாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபக்கிற்கு நெஞ்சு வலி மற்றும் பிற உபாதைகள் இருப்பதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏவான தீபக் ஹல்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் பாஜகவில் இணைந்தார்.

பாஜக வேட்பாளர் மீதான தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் மறுத்துள்ளனர்.

இதனிடையே இந்த தாக்குதலை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையை மறித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைந்து போகச் செய்தனர்.

டயமண்ட் ஹார்பர் பாராளுமன்ற தொகுதியின் எம்.பியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி இருக்கிறார். இவர் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 1ம் தேதி மேற்குவங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் முன்னதாக நந்திகிராமைச் சேர்ந்த பாஜக தொண்டர் உதய் துபே என்பவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து அதிகபட்ச மன அழுத்தம் அவருக்கு வந்ததாகவும், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பாஜகவினர் குற்றம் சுமத்தினர்.
Published by:Arun
First published: