HOME»NEWS»NATIONAL»bird flu tamil nadu ban on sale or import of chicken from kerala vai

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் - கோழி, வாத்துகளை கொண்டு வர தடை

பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் - கேரளா எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  • Share this:



கேராளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக, அம்மாநிலத்தில் இருந்து கோழி, வாத்து போன்ற பறவைகளை தமிழகத்திற்குள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்த பறவைகள் உயிரிழந்த நிலையில் கோழி, மீன் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாங்க் அணைப் பகுதியில் கடந்த 4 நாட்களில் மட்டும் 1700க்கும் அதிகமாக பறவைகள் இறந்துள்ளன. கால்நடை பராமரிப்பு துறையினர் நடத்திய சோதனையில் பறவைக் காய்ச்சல் நோயால் பறவைகள் இறந்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்த பறவைகளிடமிருந்து நோய் பரவாமல் தடுக்க பாங் அணைப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



மத்திய பிரதேச மாநிலத்தில் ஏராளமான காகங்கள் பறவை காய்ச்சல் நோயால் உயிரிழந்து வருவதாக அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரேம்சிங் தெரிவித்துள்ளார். இந்தூரில் 142 காகங்களும், மாண்ட்சார் பகுதியில் 112 காகங்களும் கடந்த ஒரு வாரத்திற்குள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களில் 12,000 வாத்துகள் உயிரிழந்தன. ஆலப்புழா பகுதிகளில் கால்நடை மருத்துவர்கள் முகாம் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் - கேரளா எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் பறவைக்காய்ச்சல் இரு மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் கோழிப்பண்ணைகளை தொடர்ந்து கண்காணிக்கும்படி கூறி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் கோழிப்பண்ணைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரளாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவையினங்கள் மற்றும் முட்டை,. கோழி தீவனம், பறவையின வளர்ப்பிடங்களில் பயன்படுத்தப்படும் உரங்கள் போன்றவற்றை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட எல்லைப்புறங்களில் உள்ள 26 சோதனைச்சாவடிகளை கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க..தைப்பூச திருநாளை பொது விடுமுறை நாளாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

அந்தந்த மாவட்டங்களில் திடீரென ஏற்படும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை தலைமை அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.










உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: