தடுப்பு மருந்து போட்ட அமைச்சருக்கு கொரோனா ஏற்பட்டது எப்படி? கோவேக்சின் தயாரித்த பயோடெக் நிறுவனம் விளக்கம்

தடுப்பு மருந்து போட்ட அமைச்சருக்கு கொரோனா ஏற்பட்டது எப்படி? கோவேக்சின் தயாரித்த பயோடெக் நிறுவனம் விளக்கம்

மாதிரி படம்

கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்று பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

 • Share this:
  கோவாக்சின் சோதனை தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஹரியானா மாநில அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது, அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், பாரத் பயோ டெக் நிறுவனமும் இணைந்து, கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. நாடு முழுவதும் கோவாக்சின் தடுப்பூசியின் 2 கட்ட சோதனைகள் நிறைவடைந்த நிலையில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி மூன்றாம் கட்ட சோதனைகள் தொடங்கியது. ஹரியானா மாநிலத்தில் தொடங்கிய 3ஆம் கட்ட சோதனையில் பங்கேற்ற அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சருமான அனில் விஜி, முதல் நபராக கோவாக்சின் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டார்.

  சோதனை முறையிலான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு, 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக, அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அம்பாலா கண்டோன்மெண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

  கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

  இது குறித்து கோவேக்சின் தடுப்பூசி தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

  அந்த விளக்கத்தில், ‘கோவேக்சின் தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்துக்கொள்ளும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே மனிதர்களிடம் பரிசோதிக்கப்படுகின்றன.  முதல் டோஸ் போட்டு 28 நாள் இடைவெளிவிட்டு இரண்டாவது போடவேண்டும். இரண்டாவது டோஸ் போட்டபிறகு 14 நாள் கழித்த பிறகே இந்த தடுப்பூசி பலன் தரும். இரண்டு டோஸையும் போட்டுக்கொண்ட பிறகே பலன் தரும் வகையிலேயே கோவேக்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  ஏற்கெனவே, சென்னையைச் சேர்ந்த நபர், கோவாக்சின் மருந்தால் உடல் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய நிலையில், தற்போது ஹரியானா அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது, கோவாக்சின் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: