பிரபல நடிகைக்குச் சொந்தமான அழகு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!
பிரபல நடிகைக்குச் சொந்தமான அழகு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!
லீனா மரிய பால்
துப்பாக்கிச் சூட்டின் போது அழகு நிலையத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்த போதும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நகரின் மையப் பகுதியில் நிகழ்ந்த சம்பவத்தால் கொச்சி நகரம் பதற்றத்திற்குள்ளானது.
கேரள மாநிலம் கொச்சியில் பிரபல நடிகை லீனா பாலுக்கு சொந்தமான அழகு நிலையத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த லீனா மரியபால் இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபே மற்றும் தமிழில் பிரியாணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரும் இவரது காதலன் சுகேஷ் சந்திரசேகரும் இணைந்து கனரா வங்கியில் 19 கோடி ரூபாய் மோசடியாக கடன்பெற்றதாக கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். சுகேஷ் சந்திரா இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த புகாரில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளார்.
லீனா பால் தனக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களை தொடர்ந்து நிர்வகித்து வந்தார். குறிப்பாக கேரள மாநிலம் கொச்சியில் மிகப் பிரபலமான நெயில் ஆர்ட்டிஸ்ட்ரி எனும் மிகப்பெரிய அழகு நிலையம் ஒன்றையும் லீனா பால் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் கொச்சியின் பனம்பிள்ளி நகரில் உள்ள லீனாவின் அழகு நிலையம் மீது ஹெல்மெட் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அழகு நிலையத்தின் படிக்கட்டில் கடிதம் ஒன்றையும் விட்டுச் சென்றனர்.
துப்பாக்கிச் சூட்டின் போது அழகு நிலையத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்த போதும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நகரின் மையப் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டால் கொச்சி நகரம் பதற்றத்திற்குள்ளானது. காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மும்பை நிழல் உலக தாதாவான ரவி பூஜாரியிடமிருந்து தனக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் வந்ததாக லீனா பால் ஏற்கெனவே புகார் அளித்தது தெரியவந்துள்ளது. 25 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய ரவி பூஜாரி நடிகைக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.