காவலர் முகத்தில் கொதிக்கும் டீயை ஊற்றிய பெண் - பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

கோப்புப்படம்.

பீகாரில் மருத்துவமனை முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீக்கடையை அகற்றக்கோரிய காவலர் ஒருவரின் முகத்தில் டீயை வீசிய பெண் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம், தள்ளு முள்ளு போன்ற செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். மோதல், அடிதடி என்பன அரிதாக நடக்கும். அதிலும் பெரும்பாலும் ஆண்களே கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால், பீகாரில் மருத்துவமனைக்கு ஒன்றுக்கு இடையூறாக இருந்த டீக்கடையை அகற்றுமாறு கூறிய காவலரின் முகத்தில் டீயை ஊற்றி பெண் ஒருவர் மோதலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் முசாபர்பூர் பகுதியில் கிருஷ்ணா மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல் நுழைவுவாயிலின் அருகே சரிதாதேவி என்பவர் டீக்கடை வைத்திருந்துள்ளார். இதனால் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளுக்கும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதற்கும் போதுமான இடவசதி இல்லாததால், இடையூறாக இருக்கும் டீக்கடையை அகற்ற வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வர் காவல்துறையிடம் முறையிட்டுள்ளார். இதனால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஜா என்ற காவலர், கடையை அகற்றுமாறு கடை உரிமையாளரான சரிதா தேவியிடம் கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சரிதா தேவி, காவலரை தகாத வார்த்தைகளில் திட்டி மிரட்டியதுடன், அவரின் முகத்தில் கொதிக்கும் டீயையும் ஊற்றியுள்ளார். இதில் காயமடைந்த அவர், உடனடியாக சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், தகவலறிந்த அகியாபூர் காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று காவலர் முகத்தில் டீயை வீசிய கடை உரிமையாளர் சரிதா தேவியைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் காவலரைத் தாக்கியதற்கு மேலும் 2 பேர் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதால் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Also read: ரஜினிகாந்த் எப்போது சென்னை திரும்புவார்? வெளியான தகவல்

மோதல் குறித்து பேசிய அகியாபூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் ரசாக் என்ற காவலர், காவலர் மீது கொலை முயற்சி, பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தலைமறைவாக இருக்கும் அந்த பெண்ணின் கூட்டாளிகள் 2 பேரை தேடி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட காவலர் ஜா உயர் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் ஜா மோதல் குறித்து தொலைபேசியில் பேசும்போது, "ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் டீக்கடையை அகற்றுமாறு கிருஷ்ணா மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் விகாஷ் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுத்தேன். முதலில், கடை உரிமையாளர் சரிதா தேவியிடம் கடையை அகற்றுமாறு கூறினேன். உடனடியாக கோபமடைந்த அவர், என்னைத் தகாத வார்த்தைகளில் திட்டினார். பின்னர், கூட்டாளிகளுடன் இணைந்து என்னை தாக்கியதுடன் முகத்தில் அவர்கள் டீயையும் வீசினர். இதனால் என் முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். காவலர் ஒருவரின் முகத்தில் பெண் ஒருவர் டீயை ஊற்றிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: