Home /News /national /

பீகார் அரசியலில் ஒரு மணி நேரத்தில் அதிரடி திருப்பங்கள்.. மீண்டும் முதல்வராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்

பீகார் அரசியலில் ஒரு மணி நேரத்தில் அதிரடி திருப்பங்கள்.. மீண்டும் முதல்வராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்

நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

Bihar Political Crisis : பீகார் மக்களையும், பாஜகவையும் நிதிஷ்குமார் ஏமாற்றிவிட்டதாக அம்மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bihar, India
    பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து, மீண்டும் ஆட்சியமைக்கிறார். முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவும் இன்று மதியம் 2 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.

    பீகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாரதிய ஜனதா கட்சியும் மொத்தமுள்ள 243 இடங்களில், 127 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தன. ஐக்கிய ஜனதா தளத்தைவிட, பாஜக அதிக இடங்களில் வென்ற போதும், நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுதந்தது பாஜக.

    இச்சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக இரு கட்சிகளின் இடையே உரசல்கள் அதிகரித்தன. தங்களது கட்சியை பலவீனப்படுத்துவதற்கு பாஜக முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டி வந்த ஐக்கிய ஜனதா தளம், மத்திய அரசின் பல்வேறு கூட்டங்களை புறக்கணித்தது. அதேபோல் பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் கடந்த சில மாதங்களாக நிதிஷ் குமார் தவிர்த்து வந்தார். குறிப்பாக குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா முதல் நிதி ஆயோக் கூட்டம் வரை, 3 வாரங்களில் மத்திய அரசின் நான்கு முக்கிய நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்தார்.

    இதனால், பாஜக உடனான கூட்டணியில் இருந்து அவர் வெளியேற உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், , எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பாட்னாவில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார் நிதிஷ் குமார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் பகு சவுகானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்தார். முன்னதாக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினால் நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்வந்தன.

    Also Read:  பாஜக கூட்டணியில் விரிசல்: நிதிஷ் குமாரின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன.. சூடு பிடிக்கும் பீகார் அரசியல் களம்

    இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவரான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவையும் சந்தித்து பேசினார். கடந்த காலங்களில் நிகழ்ந்ததை மறந்துவிட்டு, மீண்டும் ஒன்றிணைந்து பயணிப்போம் என அப்போது நிதிஷ் குமார் தேஜஸ்வி யாதவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    பின்னர் இரு தலைவர்களும் இணைந்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் ஆளுநரை சந்தித்து நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், 2020 தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக இடங்களை கைப்பற்றிய நிலையிலும் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் பீகார் மக்களையும், பாஜகவையும் நிதிஷ்குமார் ஏமாற்றிவிட்டதாக அவர் தெரிவித்தார். இதனிடையே பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 79 உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜகவுக்கு 77 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 19 எம்.எல்.ஏ.க்களும், இடதுசாரிகளுக்கு 16 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bihar, BJP, Nitish Kumar, Tamil News

    அடுத்த செய்தி