Home /News /national /

மணப்பெண்ணின் படுக்கையறையில் புகுந்து மதுபாட்டில்களை தேடி போலீசார் ரெய்டு - மயங்கி விழுந்த மாமியார்

மணப்பெண்ணின் படுக்கையறையில் புகுந்து மதுபாட்டில்களை தேடி போலீசார் ரெய்டு - மயங்கி விழுந்த மாமியார்

Police Raid

Police Raid

புதிதாக திருமணம் நடந்த வீட்டுனுள் எந்தவித அனுமதியும் இன்றி நுழைந்த போலீசார் மணமகளின் படுக்கை அறைக்குள் நுழைந்து மது பாட்டில்களை தேடி ரெய்டு நடத்தினர்.

    திருமணம் நடந்த சுவடுகள் மறைவதற்குள் திருமண வீட்டில் புகுந்து போலீசார் மதுபான பாட்டில்களை தேடி ரெய்டு நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ரெய்டின் போது மருமகள் படுக்கையறைக்குள் இருந்த நிலையில் மாமியார் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    பீகாரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் மதுபானங்கள் பயன்பாட்டை கண்காணித்து வரும் போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்தி வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் மதுபானங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், புதிதாக திருமணம் நடந்த வீட்டுனுள் எந்தவித அனுமதியும் இன்றி நுழைந்த போலீசார் மணமகளின் படுக்கை அறைக்குள் நுழைந்து மது பாட்டில்களை தேடி ரெய்டு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    பீகார் மாநிலம் ஹாஜிபூர் நகரில் ஹத்சர்கன்ஞ் எனும் பகுதியில் உள்ள ஷீலா தேவி என்பவரின் வீட்டில் கடந்த வியாழக்கிழமையன்று இரவு வைஷாலி காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீசார் மது பாட்டில்களை தேடி ரெய்டு நடத்தினர். ஷீலா தேவியின் மகனுக்கு திருமணம் நடந்து 5 நாட்கள் தான் ஆகிறது. போலீசார் ரெய்டு நடத்துவதற்காக ஷீலா தேவி வீட்டின் படுக்கையறைக்குள் அனுமதியின்றி சென்றுள்ளனர். அந்த நேரத்தில் வீட்டின் புதிய மருமகளான பூஜா குமாரி இருந்துள்ளார்.

    இதையும் படிங்க:  திகார் சிறை அதிகாரிகளுக்கு மாதம் ₹ 1 கோடி லஞ்சம்; 12 நடிகைகளுடன் பார்ட்டி - சுகேஷ் சந்திரசேகர் அட்ராசிட்டி

    அதே நேரத்தில் பெண்கள் மட்டுமே இருந்த அந்த வீட்டுனுள் போலீசார் நுழைந்த போது பெண் போலீசார் யாரும் அவர்களுடன் இருக்கவில்லை. படுக்கையறைக்குள் இருந்த மெத்தை, அலமாறி, சூட்கேஸ், மேஜை என ஒவ்வொரு இடமும் விடாமல் அவர்கள் மது பாட்டிலை தேடி சோதனை நடத்தினர்.

    போலீசார் திடீரென வந்து சோதனையிட்டதை பார்த்த பூஜாவும், ஷீலாவும் எதை தேடுகிறீர்கள் என கேட்டதற்கு, அமைதியாக இருங்கள் என மிரட்டலான தொனியில் பேசி, நாங்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மது பாட்டில்களை தேடிக் கொண்டிருப்பதாக பதிலளித்தனர். இதனிடையே ஷீலா தேவி தங்கள் வீட்டில் குடிப்பவர்கள் யாரும் கிடையாது, அனுமதியில்லாமல் இப்படி சோதனை செய்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தாதீர்கள் என கூறியதையும் பொருட்படுத்தாமல் போலீசார் தங்களின் சோதனையை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

    இதையும் படிங்க:  3 டோஸ் தடுப்பூசி போட்டும் 29 வயது இளைஞருக்கு ஓமைக்ரான் பாதிப்பு - பகீர் தகவல்

    போலீசாரின் செயலால் உணர்ச்சிவசப்பட்ட ஷீலா தேவி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.அப்போதும் போலீசார் தங்களின் செயலை தொடர்ந்து கொண்டிருந்ததாக மருமகள் பூஜா குறிப்பிட்டார். எங்கள் வீட்டில் யாருக்கும் குடிப்பழக்கம் இல்லை என்ற போதிலும் போலீசார் இப்படி செய்திருக்கிறார்கள். போலீசாரின் நடவடிக்கையால் எங்களுக்கு அவமதிப்பு ஏற்பட்டிருப்பதாக பூஜா குறிப்பிட்டார்.

    பீகார் போலீசார் மணமகளின் படுக்கை அறைக்குள் புகுந்து மதுபாட்டில்களை தேடி சோதனை நடத்துவது இது முதல் முறை நடக்கும் சம்பவம் கிடையாது. ஏற்கனவே கடந்த மாதம் பாட்னாவில் இதே போல சோதனை நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

     
    Published by:Arun
    First published:

    Tags: Atrocities of Police, Bihar

    அடுத்த செய்தி