பீகாரில் கொளுத்தும் வெயிலுக்கு 45 பேர் உயிரிழப்பு! அதீத வெப்பம் எப்படி உயிரைப்பறிக்கிறது...?

கோப்புப்படம்

பீகாரில் வரும் நாட்களிலும் வெப்ப அலைகள் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 93-ஆக அதிகரித்துள்ள நிலையில், வெயில் காரணமாக 45 பேர் உயிரிழந்ததும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அண்மையில் கண்டறியப்பட்டது. கடந்த ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு நோய் அறிகுறியுடன் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 197 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 91 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர்.

  இந்நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 93 குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் தலா 4 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

  இதனிடையே, பீகாரில் கடும் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வெப்ப அலையால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்காபாத், கயா, நவாடா ஆகிய பகுதிகளில் இயல்பைவிட 9 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கயாவில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

  2 நாட்களில் மட்டும் அவுரங்காபாத்தில் 25 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதால் வரும் 19-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மூளைக்காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் பார்வையிட்டார். மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திய பின் வெப்ப அலைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பேசிய அவர், வெப்பம் குறையும் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தினார்.

  அதிக வெப்பத்தால் மூளை பாதிக்கப்படுவதுடன், பல நோய்களும் வருவதாக அவர் கூறினார்.

  பீகாரில் வரும் நாட்களிலும் வெப்ப அலைகள் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

  Published by:Sankar
  First published: