பீகார் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்களை கட்சிகள் அறிவித்து வரும் நிலையில், அம்மாநில அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் இம்மாத இறுதியில் தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய தேர்தல் இதுவாகும். நவம்பர் 10-ஆம் தேதி 3 கட்ட வாக்குப்பதிவிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 8 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதையடுத்து முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில், கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக ஒரு கூட்டணியாகவும், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளிலும், இடதுசாரி கட்சிகள் 29 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதிஷ் குமார் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 122 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 121 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக நிதிஷ் குமாரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி, நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் தாங்கள் இடம்பெறவில்லை என்றும், சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அக்டோபர் 8-ஆம் தேதியுடன் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த உடன், தேர்தல் பரப்புரையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.