பீகாரையும் கைப்பற்றிய பாஜக... தமிழகத்திலும் அசுரவளர்ச்சிக்கு வாய்ப்புள்ளதா..?

மாதிரிப் படம்

ஐக்கிய ஜனதா தளத்தின் வீழ்ச்சிக்கு பாஜகவின் செயல்திட்டமே காரணம் எனக் கூறப்படுகிறது. இதே செயல்திட்டத்தை தமிழகத்திலும் பாஜக செய்ய வாய்ப்பு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 • Share this:
  மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, பீகாரிலும் கூட்டணி கட்சியை பின்னுக்குத் தள்ளி அசுர வளர்ச்சி அடைந்துள்ள பாஜக, தமிழகத்திலும் அதேபோல வளர வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என அரசியல் கருத்தாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  மகாராஷ்டிராவில் எப்போதும் சிவசேனாவின் துணையுடனே தேர்தல்களை சந்தித்து வந்த பாஜக, திடீரென அசுர வளர்ச்சி பெற்றது. இதையடுத்து, சிவசேனாவை ஓரங்கட்ட நினைத்தபோது, உஷாராகிப் போன உத்தவ் தாக்கரே, பாஜகவை புறந்தள்ளிவிட்டு, அவர்களின் பரம எதிரியான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார். அத்துடன், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, ஆட்சியைப் பிடித்து, முதலமைச்சர் என்ற பதவியையும் கைப்பற்றினார். இதேபோல், பீகாரிலும் பாஜக அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

  கடந்த 2015ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிக்கூட்டணி அமைத்து 160 இடங்களில் போட்டியிட்ட பாஜக, அப்போது 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால், தற்போது 110 இடங்களில் மட்டுமே போட்டியிட்டு, 74 இடங்களில் வென்று, பீகாரின் தனிப்பெரும் இரண்டாவது கட்சியாக உருமாறியுள்ளது.

  ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்ற நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 101 இடங்களில் போட்டியிட்டு, 71 இடங்களில் வெற்றிபெற்றது. அதன்பிறகு, மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார், தற்போதைய தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றார். தற்போது 115 இடங்களில் போட்டியிட்ட நிதிஷ்குமார் கட்சி, வெறும் 42 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று, மாநில அளவில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

  இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் வீழ்ச்சிக்கு பாஜகவின் செயல்திட்டமே காரணம் எனக் கூறப்படுகிறது. இதே செயல்திட்டத்தை தமிழகத்திலும் பாஜக செய்ய வாய்ப்பு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் பாஜக அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது

  இருப்பினும், பிற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் தனிப்பெரும் கட்சியாக வளர, வேல் யாத்திரை போன்று பல்வேறு முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

   
  Published by:Vijay R
  First published: