பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியானது ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்திவருகிறது. எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் சில நாள்களுக்கு முன்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், கயா மாநகராட்சியில் 40 ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய பெண் துணை மேயராக வெற்றி பெற்றுள்ளார். கணவரை இழந்த பெண்ணான சிந்தா தேவி, கயா பகுதியில் குப்பை அள்ளி, தெருக்களை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளராக சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளாக காய்கறி விற்று வந்த இவர் கயா மேயர் தேர்தலில் களம் கண்டார்.
துணை மேயர் பதவிக்கு இவர் போட்டியிட்ட நிலையில், இவருக்கு முன்னாள் மேயராக இருந்த மோகன் ஸ்ரீவத்சவா ஆதரவு தந்தார். சிந்தா தேவியை எதிர்த்து நிகிதா ரஜக் என்பவர் போட்டியிட்ட நிலையில், சிந்தா தேவி தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட சுமார் 27 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்ற அபார வெற்றி பெற்றார். இதை வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
தேர்தல் வெற்றி குறித்து பேசிய சிந்தா தேவி, அனைத்து மக்களின் ஆதரவுடன் தான் வெற்றி பெற்றதாகவும் இந்த வெற்றி மகிழ்ச்சியை தருவதாகவும் கூறினார். கயா நகரத்தின் சாலை கட்டுமானம், வடிகால், தூய்மை பணி ஆகியவற்றுக்கு கவனம் செலுத்தி பணியாற்றுவேன் என்று கூறினார். இது போன்ற எளிய மனிதர்கள் கயாவில் வெற்றி பெறுவது முதல்முறை அல்ல. ஏற்கனவே கயா தொகுதி எம்பியாக கல் உடைக்கும் தொழிலாளியான பகவதி தேவி என்ற பெண் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதுவும் அத்தகைய வெற்றிதான் என்று சிந்தா தேவியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar, Election Result