மேற்குவங்கத்திற்கு திருடனை தேடிச் சென்ற பீகார் போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்!

கொல்லப்பட்ட பீகார் போலீஸ் அதிகாரி

இருசக்கர வாகனம் திருட்டுவழக்கில் திருடர்களை கைது செய்வதற்காக மேற்குவங்கம் சென்ற பீகார் காவல்துறை அதிகாரி மர்ம கும்பலால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

  • Share this:
பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் காவல்நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் குமார். இவருடைய காவல்நிலையத்தில் பதிவான இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக அண்டை மாநில பகுதியான மேற்குவங்கத்தின் உத்தர் தினஜ்புர் மாவட்டத்தில் உள்ள கோல்பொகர் காவல் நிலைய சரகத்தில் உள்ள பந்தபடா எனும் கிராமத்திற்கு சக காவலர்களுடன் திருட்டு கும்பலை கைது செய்வதற்காக நேற்றிரவு சென்றுள்ளார்.

பந்தபடா கிராமத்தில் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக தேடுதல் வேட்டையில் குமார் தலைமையிலான போலீஸ் குழுவினர் ஈடுபட்டிருந்த போது அங்கு குமாரை சூழ்ந்த கும்பல் ஒன்று திடீரென அவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியது.

சம்பவம் குறித்து அறிந்த பஞ்சிபரா புறக்காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு மேற்குவங்க காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் விரைந்தனர். அங்கு வந்து காயங்களுடன் இருந்த அதிகாரி குமாரை மீட்டு இஸ்லாம்பூரில் உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காவல் அதிகாரி குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஃபிரோஸ் ஆலாம், அபுசர் ஆலாம் மற்றும் சஹின்புர் கதூன் ஆகிய மூன்று பேரை மேற்குவங்க காவல்துறையினர் கைது செய்தனர்.

மேற்குவங்கத்தில் உள்ள உத்தன் தினஜ்பூர் மாவட்டமும், பீகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டமும் இரு மாநில எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.

இதனிடையே உயிரிழந்த காவல் அதிகாரி குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. இருப்பினும் அவரது உடலை பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர்.

மேற்குவங்க காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காதது ஏன், குமார் மீது தாக்குதல் நடந்த போது சக காவலர்கள் எங்கே போனார்கள் என குடும்பத்தினர் கேள்வி கேட்டனர். குமாரின் குடும்பத்தினரிடம் மாவட்ட நீதிபதி ஆதித்ய பிரகாஷ் மற்றும் ஐஜி சுரேஷ் குமார் சவுத்ரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வழக்கில் சிறப்பு காவல்படை விசாரணை நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் குமாரின் குடும்பத்தினருக்கு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று பீகார் டிஜிபி எஸ்.கே.சிங்கால் தெரிவித்தார். குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

1994ம் ஆண்டு பீகார் காவல்துறையில் இணைந்த குமார், கடந்த ஆண்டு கிஷன்கஞ்ச் காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: