ஹோம் /நியூஸ் /இந்தியா /

எதிர்க்கட்சி நடத்திய இப்தார் விருந்தில் பங்கேற்ற நிதீஷ் குமார் - பிகார் அரசியலில் பரபரப்பு

எதிர்க்கட்சி நடத்திய இப்தார் விருந்தில் பங்கேற்ற நிதீஷ் குமார் - பிகார் அரசியலில் பரபரப்பு

நிதீஷ் குமார்

நிதீஷ் குமார்

எதிர்க்கட்சியான ஆர்ஜேடி நடத்திய இப்தார் விருந்தில் பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பங்கேற்றது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அம்மாநில எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதாள தளம் நடத்திய இப்தார் விருந்து விழாவில் நேற்று பங்கேற்றார்.இது பிகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.ஆர்ஜேடி நடத்தும் இப்தார் விருந்து விழாவில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நிதீஷ் குமார் கலந்து கொண்டுள்ளார்.

  இந்த இப்தார் விழாவானது ஆர்ஜேடி தலைவரும் மாநில முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவியின் இல்லத்தில் நடத்தப்பட்டது. இதில், லாலு பிரசாத் யாதவ் - ராப்ரி தேவியின் மகன்களான தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர். தேஜஸ்வி யாதவ் மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இந்த விழாவில் பாஜக தலைவர்களான அவ்தேஸ் நாராயன் சிங் மற்றும் சயீத் ஷாநவாஸ் ஹுசைன் ஆகியோரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

  மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் மகனான சிரக் பாஸ்வானும் இந்த விழாவில் பங்கேற்றார். 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவால் ராம் விலாஸ் பாஸ்வான் மறைந்த நிலையில், அதன் பின்னர் சிரக் பாஸ்வானும் நிதீஷ் குமாரும் சந்திப்பது இதுவே முதல் முறை. இந்த சந்திப்பின் போது நிதீஷ் குமாரின் கால்களை தொட்டு வணங்கி சிரக் பாஸ்வான் ஆசி பெற்றார்.

  இந்த விழாவில் நிதீஷ் குமார் பங்கேற்றது யதார்த்தமான அரசியல் நிகழ்வாக கூறப்பட்டாலும் இதில் பாஜகவுக்கு சிக்னல் கொடுக்கும் அரசியல் கணக்கும் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியூ-பாஜக கூட்டணி வெற்றி பெற்று நிதீஷ் குமார் நான்காவது முறை முதலமைச்சரானார். ஆனால், இந்த முறை ஜேடியூவை விட பாஜக முதல் முறையாக அதிக இடங்களை கைப்பற்றியது. இருந்தாலும், நிதீஷ் குமாருக்கு பாஜக மேலிடம் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தது. ஆனால், மாநில பாஜக எம்எல்ஏக்கள் சிலர் பாஜக தலைவர் முதலமைச்சராக வேண்டும் என அடிக்கடி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

  இதையும் படிங்க: ஆந்திராவில் கிராம மக்களுக்கு 2 வாரம் லாக்டவுன்... கொரோனாவை விட கொடிய காரணம்

  இதன் காரணமாக நிதீஷ் குமார் மறைமுக நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், எதிர்க்கட்சியான ஆர்ஜேடி நடத்திய இப்தார் விருந்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பங்கேற்றுள்ளார். ஏற்கனவே, பிரதமர் நரேந்தி மோடியை 2014ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியதை காரணம் காட்டி கூட்டணியில் விட்டு வெளியேறிய நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மகாபந்தன் என்ற மாபெரும் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார்.

  ஆனால், 2017ஆம் ஆண்டில் ஆர்ஜேடியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கூட்டணியை விட்டு வெளியேறி மீண்டும் பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக நீடித்து வருகிறார் நிதீஷ் குமார். ஏற்கனவே, ஆர்ஜேடியுடன் கைக்குலுக்கி கூட்டணி வைத்துள்ள நிதீஷ் குமார், மீண்டும் பாஜகவை உதறி ஆர்ஜேடி கூட்டணிக்கு செல்வாரா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

  இந்த கருத்தை நிதீஷ் குமாரின் கூட்டணி கட்சியான பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் கூறுகையில், "பாஜக சார்பில் நடத்தப்பட்ட இப்தார் விருந்தில் நிதீஷ் குமார் பங்கேற்றார். அதேபோல், தேஜஸ்வி யாதவ் நடத்தும் இப்தார் விருந்தில் நாங்களும், நிதீஷ் குமாரும் பங்கேற்றுள்ளோம். இதில் அரசியல் செய்ய ஏதும் இல்லை" என்றுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Nitish Kumar, RJD