டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டம் 4 மாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து மார்ச் மாதம் 26 ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
விவசாய சங்கங்களின் தலைவர்களில் ஒருவரான பூட்டா சிங், திக்ரி பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வேளாண்சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி 4 மாதங்கள் நிறைவடைவதை ஒட்டி, வரும் 26ம் தேதி அமைதியான முறையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றார்.
மேலும், எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் ரயில்வேத்துறை தனியார் மயமாக்கல் ஆகியவற்றை கண்டித்து, வரும் 15ம் தேதி நடைபெற உள்ள வர்த்தக சங்கத்தினரின் போராட்டத்திற்கு விவசாயிகள் ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 28 ஆம் தேதி தேசிய விவசாய சட்டங்களின் நகல் எரிப்பு போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைப்பு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.