இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களை கடந்து ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைந்தது.
136 நாள்களில் ராகுல் காந்தி 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டரை கடந்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு பொதுக் கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் - ஐ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராகுல்காந்தி தேசிய கொடியை ஏற்றினார். அப்போது, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா, பிஎஸ்பி எம்.பி. ஷியாம் சிங் யாதவ், உமர் அப்துல்லா, திருமாவளவன் உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்களும் ஆயிரக்கணக்கானக்கான தொண்டர்களும் கடும் பனி மழையையும் பொருட்படுத்தாமல் நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, தனக்காகவோ, காங்கிரஸ் கட்சிக்காகவோ யாத்திரையை மேற்கொள்ளவில்லை என கூறினார். மக்களுக்காகவும் நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராகவும் யாத்திரை நடத்தியதாக தெரிவித்தார். காஷ்மீர் மக்கள் தனக்கு குண்டுகளை வழங்காமல், இதயங்களை வழங்கியதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்த ராகுல்காந்தி, அந்த வலி வன்முறை தூண்டுபவர்களுக்கு ஒருபோதும் புரியாது என்றார். வன்முறையை தூண்டும் மோடி, அமித்ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றோருக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது என்றும் குறிப்பிட்டார்,
பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்ததாக கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியமைத்தால், நாடாளுமன்ற ஜனநாயகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது” என கூறினார்.
யாத்திரையின் போது, 100 தெரு கூட்டங்களையும் 13 பத்திரிகையாளர் சந்திப்பையும் ராகுல் காந்தி நடத்தினார். இது தவிர 375 கலந்துரையாடல்களையும் ராகுல் காந்தி நடத்தியுள்ளார்.
மாற்று கட்சித் தலைவர்கள், நடிகர் நடிகைகள், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் எல்- ராம்தாஸ் ராணுவத்தினர், எழுத்தாளர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானவர்கள் ராகுல் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Kashmir, Rahul gandhi