வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், நான்கு மாதங்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு, இன்று காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை, முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் போராட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. காசிப்பூர் எல்லையில் சாலையை மறித்து, சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காசிப்பூர் எல்லையில் திரண்டுள்ள விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை பாடல்களாகவும், நடனமாகவும் வெளிப்படுத்தினர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், ரயில்வே தண்டவாளத்தில் நின்று, கிஷான் மஸ்தூர் சங்கர்ஸ் கமிட்டியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியானா மாநிலம் அம்பலாபகுதியில், சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சிங்கு எல்லையிலும் சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.