பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மம்தா பானர்ஜி பெற்ற மிக சிறந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தின் பவானிபூர், சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் மற்றும் ஒடிசாவின் பிப்பிலி ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் தொடக்கம் முதலேயே முன்னணியில் இருந்து வந்தார்.
ஒருசில சுற்றுகளிலேயே மம்தாவின் வெற்றி உறுதியானது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றி களிப்பில் ஈடுபட தொடங்கினர். மொத்தமுள்ள 21 சுற்றுகளில் முடிவில் மம்தா பானர்ஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று மிகப் பெரிய வெற்றியை பெற்றார்.
கடந்த 2011ம் ஆண்டு இதே பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி 54,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது தனது முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த
வெற்றியின் மூலம் முதலமைச்சர் பதவியையும் அவர் தக்க வைத்துகொண்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதன் முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இதையும் படிங்க: தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் கூடாது: மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
மம்தா முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட போதிலும், 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே அவரால் முதல்வராக தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து தனது சொந்த தொகுதியான பவானிப்பூரில் போட்டியிடுவது என அவர் முடிவு செய்தார். பாஜகவின் தேர்தல் வியூகங்களை சமாளிக்க தனக்கு பவானிப்பூரி தொகுதியாக சாதகமானது என அவர் கணித்திருந்தார். அதன்படியே தற்போது பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.