கடந்த 20 நாட்களில் கொரோனா பரவல் 400% உயர்வு! - பெங்களூருவில் மீண்டும் லாக்டவுன்?

பெங்களூரு

பெங்களூருவில் வரும் மார்ச் 26 வாக்கில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4,000 முதல் 6,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்

  • Share this:
பெங்களூருவில் கொரோனா பரவல் கடந்த 20 நாட்களில் 400% அதிகரித்துள்ளதால் அங்கு கொரோனாவின் 2ம் அலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கும் மாநிலங்களுள் கர்நாடகாவும் ஒன்று. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் தற்போது கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. சமீப நாட்களில் அங்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை 925 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) தொற்று பாதிப்பு 1,000ஐ கடந்தது. அங்கு நேற்று ஒரே நாளில் 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கும் கர்நாடக மாநிலத்தில் மொத்தமே 1,798 பேருக்கு தான் நோய்த்தொற்று ஏற்பட்டது.

இதன் மூலம் கடந்த 20 நாட்களில் மட்டும் நோய்த்தொற்று 400% அதிகரித்துள்ளதாக கொரோனா பரவலை கண்காணித்து ஆராய்ந்து வரும் சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் மார்ச் 26 வாக்கில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4,000 முதல் 6,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இது கொரோனாவின் 2வது அலை என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் திரையரங்குகளில் 50% இருக்கைகள், திருமண விழாக்களில் கட்டுப்பாடு போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவருவது குறித்து பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில் அதிகளவாக பெங்களூரு மாவட்டத்தில் 4,16,633 பேரும், மைசூருவில் 54,741 பேரும், பெல்லாரியில் 39,473 பேரும் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல குணமடைந்தவர்களிலும் பெங்களூருவில் அதிகபட்சமாக 4,03,040 பேர் குணமடைந்துள்ளனர். மைசூரு மாவட்டத்தில் 53,401 பேரும், பெல்லாரியில் 38,751 பேரும் குணமடைந்துள்லனர்,

இதனிடையே பெங்களூருவில் தொற்று அதிகரித்து வருவது தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாதா பிரசாதா கூறுகையில், பொதுமக்கள் கொரொனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவில் குறைந்தபட்சமாக பகுதிநேர பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
Published by:Arun
First published: