தான் பயணித்த ஓலா காரில் ஏசி இயங்காததையடுத்து வாடிக்கையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால், இழப்பீடாக ரூ. 15,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த வாடிக்கையாளர், விகாஸ் பூஷன், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பெங்களூரு நகர மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அகர்வாலுக்கு எதிராக சேவை குறைபாடு புகார் ஒன்றைப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 2021-இல் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான அவரது புகாரில், 36 வயதான பூஷன், 8 மணி நேரத்திற்கு ஓலா பிரைம் செடானை முன்பதிவு செய்திருந்தார். ஏசி வசதியுடன் கூடிய கார் அவருக்கு ஆப்-ல் உறுதியளிக்கப்பட்ட போதிலும், காரில் ஏசி வேலை செய்யாததைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக தனது புகாரில் பூஷன் கூறியுள்ளார். இதனால் அவரும் அவரது சக பயணியும் அசௌகரியத்துடன் தங்கள் பயணத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பயணத்தின் முடிவில், அந்த நபரிடம் கட்டணமாக ஏசி பில்லுடன் சேர்த்து ரூ. 1,837 செலுத்தும்படி கேட்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பூஷன் ஓலாவின் வாடிக்கையாளர் சேவையை அணுகி, இயங்காத போதிலும், ஏசி, கட்டணத்தின் ஒரு பகுதியாக இருந்ததையும், பயணத்தின்போது அது வேலை செய்யாததால், அந்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், அவரிடம் முறையான கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், ஏசிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், பூஷன் அடுத்ததாக ஓலா இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வாலை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அகர்வாலுக்கு மின்னஞ்சல்களில், கட்டணம் மற்றும் ஆரம்ப வாடகை ஒப்பந்தத்தின்படி ஏசி கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ட்விட்டரில் அகர்வாலுடன் தொடர்பு கொள்ள முயன்றும், எதிலும் அவருக்கு பதில் வரவில்லை. ஆகவே, நவம்பர் 2021-இல் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனில் ஓலா மீது பூஷன் புகார் அளித்தார். இறுதியாக ஓலா தனது கேபில் ஏசி வேலை செய்யவில்லை என்பதை மின்னஞ்சலில் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆனால், அவரது கட்டணத்தைத் திருப்பித் தர மறுத்துள்ளது. மாறாக, 100 ரூபாய்க்கான வவுச்சர் ஒன்று வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், கடைசி முயற்சியாக, பெங்களூரு நகர மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகி புகார் ஒன்றை அளித்தார் பூஷன். புகாரை பரிசீலித்த நீதிபதிகள், வாகனத்தில் ஏசி செயல்படாத போதிலும், ஓலா நிறுவனம் தனது மின்னஞ்சலில் 1,837 ரூபாயை வசூலித்ததாக குறிப்பிட்டுள்ளதை கூறினர். ‘ஓலா உறுதியளித்தபடி வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்க கடமைப்பட்டுள்ளது. பெங்களூரு நபரின் வழக்கில், 8 மணி நேர பயணக் காலம் முழுவதும் ஏசி சேவையை வழங்காமல் வாடிக்கையாளருக்கு இடையூறு மற்றும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளனர்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின், நீதிமன்றம் பூஷனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. வாடிக்கையாளருக்கு மன வேதனையையும் சிரமத்தையும் ஏற்படுத்தியதற்காக இழப்பீடாக 10,000 ரூபாய் வழங்குமாறு அகர்வாலுக்கு உத்தரவிட்டது. மேலும், புகார்தாரரின் வழக்குச் செலவு ரூ.5,000-ஐ ஏற்குமாறும், முழுக் கட்டணமான ரூ. 1,837-ஐ வட்டியுடன் திருப்பித் தரவும் உத்தரவிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.