கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின

கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம்

பெங்களூரில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம் சூழ்ந்த வீட்டில் இருந்து பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டது, வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது போன்ற அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 • Share this:
  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து விடியவிடிய பலத்த மழை பெய்தது. லால்பக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

  ஜே.பி நகர், கனகபுரா, யெலச்சனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி ஏரி போல் காட்சியளித்தது. ஒசஹேரஹள்ளி பகுதியில் ஏராளமான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் மூழ்கிய வீட்டிலிருந்து பச்சிளம் குழந்தைகளை அப்பகுதி இளைஞர்கள் உயிரை பணயமாக வைத்து மீட்ட காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது.

  Also read: குஜராத்தில் 3 திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி - நீர்ப்பாசன திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதாக மாநில அரசுக்கு பாராட்டு

  மேலும், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பெங்களூருவில் உள்ள அனுசுயா மந்திர் வளாகத்தில் 11 அடிக்கு மழை நீர் தேங்கியது. பின்னர் காலையில் மழை நீர் வடிந்ததைத் தொடர்ந்து வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது. மங்கனஹள்ளி ஏரி நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்தததால் அருகில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.  மத்திய பெங்களூரு, ஹெப்பல் பகுதிகளில் சனிக்கிழமையும் மழை நீடித்தது. கருமேகங்கள் சூழ்ந்து சாலையில் எதிரே செல்லும் வாகனங்கள் கூட தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர். பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்த நிலையில், வெள்ளத்தால் உருக்குலைந்த வீடுகளை பார்த்து மக்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

  பெங்களூரு மாநகரில் மழைநீர் வடிகால்கள் மோசமான நிலையில் இருப்பதாலேயே வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வெள்ள பாதிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் எடியூரப்பா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
  Published by:Rizwan
  First published: