இரவு நேரத்தில் ரோட்டில் நடந்த தம்பதியிடம் காவல்துறையினர் தொல்லை செய்து அபராதம் போட்டு பணம் பறித்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் சம்பவத்தை ட்விட்டரில் விவரித்துள்ளார்.
அந்த நபரின் பெயர் கார்திக் பத்ரி. இவர் டிசம்பர் 8ஆம் தேதி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து டவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, நானும் எனது மனைவியும் நேற்றிரவு எதிர்கொண்ட வலி மிகுந்த சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.எனது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று நானும் எனது மனைவியும் இரவு 12.30 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்தோம்.
எங்கள் வீட்டருகே வந்தடைந்தபோது, காவல்துறை ரோந்து வாகனம் மூலம் சில காவலர்கள் அங்கு வந்தனர். எங்கள் அருகே வாகனத்தை நிறுத்தி விசாரிக்கத் தொடங்கினர். விவரத்தை கூறிய போது அதில் திருப்தி அடையாமல் எங்கள் அடையாள அட்டைகளை கேட்டனர். நாங்கள் அடையாள அட்டையை காண்பித்த போதும், அத்தோடு விடாமல் எங்கள் செல்போன்களை வாங்கி எங்கள் உறவு, வேலை உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை ஆராய்ந்து பார்த்தனர்.
தொடர்ந்து திடீரென சலான் புத்தகத்தை எடுத்து எங்கள் பெயர் மற்றும் ஆதார் எண்ணை எழுத ஆரம்பித்தனர். ஏன் சலான் தருகிறார்கள் என்று அதிர்ச்சி அடைந்து கேட்ட போது, 11 மணிக்கு மேல் சாலையில் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர். படித்தவர்களான உங்களுக்கு இந்த விதிகள் எல்லாம் தெரியாத என்றும் வேறு கேட்டனர். விதிகள் தெரியவில்லை மன்னித்துவிடுங்கள் என்று கூறிய போதும் அத்தோடு விடாமல் ரூ.3,000 அபராதம் கட்ட வேண்டும் என்றனர்.
இந்த முறை விட்டுவிடுங்கள் என்று அவர்களிடம் கெஞ்சி பார்த்தபோது கோபத்துடன் மிரட்டத்தொடங்கினர்.ஒரு கட்டத்தில் எனது மனைவிக்கு அழுகையே வந்துவிட்டது. கடைசியில், ஒருவழியாக பேடிஎம் ஸ்கேனர் மூலம் ரூ.1,000 அபராதம் செலுத்திவிட்டு வந்தோம். இவ்வாறு சம்பவத்தை விவரித்த அந்த நபர், பெங்களூரு காவல்துறையை டேக் செய்து கேள்வி ஒன்றை எழுப்பினார்.
இதையும் படிங்க: வாடகை காரில் ஏறிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. ஜன்னல் வழியாக வீசப்பட்ட 10 மாத குழந்தை.. கொடூர சம்பவம்!
அதில், நான் பெங்களூரு காவல்துறையிடம் பணிவாகக் கேட்க விரும்புவது இது தான். இது போன்று சட்டத்தின் துணை கொண்டு பொதுமக்களை கொடுமைபடுத்துவது நியாயமா, இது ஒருவிதத்தில் தீவிரவாத செயல் இல்லையா, நேர்மையான சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்களை இப்படி தான் நடத்துவதா. இது நியாயமா என்று கேட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த பெங்களூரு டிசிபி அனுப் ஷெட்டி, இதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. சம்பந்தபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதன் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு காவலர்கள் அடையாளம் காணப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.மேலும், இது போன்ற செயல்களில் காவலர்கள் ஈடுபடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bengaluru police, Twitter