வாக்குப்பதிவு இயந்திரத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் வீட்டில் தூங்கிய தேர்தல் அலுவலர்!

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் வீட்டில் தூங்கிய தேர்தல் அலுவலர்!

வாக்குப்பதிவு இயந்திரம்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் வீட்டில் வாக்கு இயந்திரத்துடன் ஒரு இரவு முழுவதும் தூங்கிய தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

  • Share this:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரின் இல்லத்தில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (ஈ.வி.எம்), விவிபேட் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் வீட்டில் வாக்கு இயந்திரத்துடன் ஒரு இரவு முழுவதும் தூங்கிய தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் இன்று 31 தொகுதிகளுக்கு 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதனிடையே, உலுபெரியா பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் வீட்டில் இருந்து 4 ரிசர்வ் வாக்குப்பதிவு இயந்திரங்கள், VVPAT இயந்திரங்களை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது. சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரை தேர்தல் ஆணையம் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கவுதம் கோஷ் என்பவரின் வீட்டிலிருந்து தான் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹவுரா செக்டரின் தேர்தல் அலுவலர் தபன் சர்கார் என்பவர், கவுதம் கோஷின் உறவினர் ஆவார். தேர்தல் அலுவலர் தபன் சர்கார் நேற்றிரவு பிடிஓ அலுவலகத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வந்த போது அங்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து தபன் சர்கார் தனது உறவினரான கவுதம் கோஷின் வீட்டுக்கு சென்றுள்ளார். காரிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கலாம் என்றால், அது பாதுகாப்பற்றது என கருதி கவுதம் கோஷின் வீட்டுக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கிறார் தபன் சர்கார். மேலும் நேற்றிரவு அங்கேயே அவர் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தங்கி தூங்கியிருக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், தபன் சர்காரின் நடவடிக்கை மிக தீவிரமானது, உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட 4 இயந்திரங்களும் தேர்தலுக்கு பயன்படுத்தாமல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

முன்னதாக அசாமில் பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் காரில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவுகூறத்தக்கது.
Published by:Arun
First published: