காங் - இடதுசாரிகள் கூட்டணியில் இணைந்த மேற்குவங்கத்தின் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதகுரு: யார் இந்த பிர்சாடா அப்பாஸ் சித்திகி?

காங் - இடதுசாரிகள் கூட்டணியில் இணைந்த மேற்குவங்கத்தின் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதகுரு: யார் இந்த பிர்சாடா அப்பாஸ் சித்திகி?

பிர்சாடா அப்பாஸ் சித்திகி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி நுஸ்ரத் ஜகானை கடுமையாக விமர்சித்திருக்கிறார். வெட்கமில்லாமல் கோவில்களுக்கு செல்வதாகவும், பணத்துக்காக அங்கங்களை காட்டிவருகிறார் என்றும் பிர்சாடா அப்பாஸ் சித்திகி பேசியுள்ளார்.

  • Share this:
மும்முனை போட்டியில் உள்ள மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணியில் புதிய வரவாக இணைந்துள்ள பிர்சாடா அப்பாஸ் சித்திகி, காங்கிரஸ் கட்சிக்குள் பிளவை கொண்டு வந்திருக்கிறார். மேற்குவங்கத்தின் சர்ச்சைக்குரிய மதகுருவாக விளங்கும் பிர்சாடா அப்பாஸ் சித்திகியின் பின்னணி தான் என்ன?

5 மாநில சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் இவற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக மாறியிருப்பது மேற்குவங்கம் தான். 294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்குவங்கத்தில், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி கொல்கத்தாவின் பரேட் மைதானத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்திய பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இது மாநிலத்தில் அரசியல் ரீதியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. மதச்சார்பற்ற கூட்டணியாக விளங்கும் இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணியில் மேற்குவங்கத்தில் பிரபல இஸ்லாமிய மதகுரு பிர்சாடா அப்பாஸ் சித்திகி தலைமையிலான இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி (Indian Secular Front) இணைந்தது. அக்கட்சிக்கு 30 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.

ஹூக்லி மாவட்டத்தில் ஃபர்ஃபுரா ஷெரீப்பின் மதகுருவாக விளங்கும் பிர்சாடா அப்பாஸ் சித்திகி தென் வங்காளத்தில் செல்வாக்கு பெற்றவராக விளங்குகிறார். இருப்பினும் மதச்சார்பற்ற கூட்டணியில் வகுப்புவாத தலைவராக விளங்கும் பிர்சாடா அப்பாஸ் இணைந்தது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா ஐஎஸ்எஃப் குறித்து கூறுகையில் இது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திற்கு முரணானது என்றார்.

பிர்சாடா அப்பாஸ் சித்திகி


பிர்சாடா அப்பாஸ் சித்திகி தலைமையிலான இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி பெயரளவில் மதச்சார்பற்ற கட்சியாக காட்டிக்கொண்டாலும் அது ஒரு வகுப்புவாத சக்தியாகவே கருதப்படுகிறது..
முன்னதாக அவர் பல தவறான தகவல்களையும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி நுஸ்ரத் ஜகானை கடுமையாக விமர்சித்திருக்கிறார். வெட்கமில்லாமல் கோவில்களுக்கு செல்வதாகவும், பணத்துக்காக அங்கங்களை காட்டிவருகிறார் என்றும் பேசியுள்ளார்.

இஸ்லாமிய புனித நூலான குரானை மாற்றியமைக்க முயற்சித்ததால் சீனாவில் கொரோனா தொற்று தோன்றியதாகவும் பிர்சாடா அப்பாஸ் சித்திகி கூறியிருக்கிறார்.

இதன் பின்னர், இந்தியாவில் 50 கோடி மக்களை கொல்லும் வகையில் கொடிய வைரஸ் ஒன்று பரவ வேண்டும் என்று அல்லாவிடம் வேண்டிக் கொள்வேன் என கூறினார். பின்னர் எதிர்ப்பு எழுந்ததால் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார்.

இதனை தொடர்ந்து சீனாவில் முஸ்லிம்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என தெரிவித்தார். இது போன்ற அவரின் கருத்துக்கள் முன்னர் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள மக்கள் தொகையில் 2011 நிலவரப்படி 27% பேர் இஸ்லாமியர்களாக இருக்கின்றனர். பிர்சாடா அப்பாஸ் சித்திகியின் வருகை காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணிக்கு வலு சேர்க்குமா என்பது ஒரு புறம் இருந்தாலும், இது மறைமுகமாக பாஜகவுக்கே வலுசேர்க்கும் என்று கருதப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸுக்கு செல்ல வேண்டிய இஸ்லாமிய ஓட்டுக்களை பிர்சாடா அப்பாஸ் சித்திகி கணிசமாக பிரித்து விடுவார். அதே நேரத்தில் வகுப்புவாத கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் இடதுசாரிகளில் இந்துக்களாக உள்ளவர்கள் பாஜகவுக்கே வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்பிக்கை தெரிவிக்கிறது.

இந்த கேள்விகளுக்கான விடை மே 2ம் தேதி வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவரும்.
Published by:Arun
First published: