ஹோம் /நியூஸ் /இந்தியா /

மின்சாரம் இல்லாத காலம் முதல் மின் வெட்டு காலம் வரை... ஒரு ரீவைண்ட் சிறப்பு பார்வை

மின்சாரம் இல்லாத காலம் முதல் மின் வெட்டு காலம் வரை... ஒரு ரீவைண்ட் சிறப்பு பார்வை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாடு மின்சார வாரியம் 1957-ம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு மின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்வெட்டு பிரச்னை தலைதூக்கியுள்ள நிலையில், மின்சாரம் அறிமுகம் ஆவதற்கு முன்பு இருந்து தற்போது வரையில் கடந்து வந்த பாதையை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. சற்று நேரம் மின்சாரம் இல்லையென்றால் வாழ்க்கை ஸ்தம்பித்துவிடுகிறது. பெரும்பான்மையான இயந்திரங்கள் மின்சக்தியாலேயே இயங்குகின்றன. மோட்டார், கார்கள், ரயில் என்ஜின்கள் அனைத்துக்கும் மின்சக்தியே ஆதாரமாக இருக்கிறது.

  ஆனால், மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய உலகம் இரவில் ஒரு இருட்டுக் கோட்டைதான். வீடுகளில் அப்போது குத்து விளக்கு, காமாட்சி விளக்கு, அகல் விளக்கு, சிம்னி விளக்கு, அரிக்கேன் விளக்கு என விதவிதமான விளக்குகள் பயன்பாட்டில் இருந்தன.

  இன்று வீடுகள் தோறும் நீக்கமற நிறைந்திருக்கும் தொலைக்காட்சி மற்றும் செல்போன் போன்றவை கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வாழ்ந்தவர்கள் அந்தி சாய்ந்ததும் வீட்டோடு முடங்கினர். கோயில் பிரகாரங்களில் இருட்டை போக்க பாவை விளக்கு, நந்தா விளக்கு, தூண்டாமணி விளக்குகளும் கோயிலுக்குள் வெளிச்சம் பரப்பி நின்றன.

  இதையும் படிங்க - இந்தியாவில் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டாம்.. மத்திய அரசு செக்!

  1831-ல் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகிலேயே முதன் முதலாக இங்கிலாந்தின் சர்ரே நகரில் உள்ள தெருவில் 1881-ம் ஆண்டு இறுதியில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு 1897-ல் இந்தியாவில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரில் மின்சாரம் அறிமுகம் ஆனது. முதன்முதலில் டார்ஜிலிங் நகராட்சியில், நீர் மின்திட்டம், இமயமலைக் குன்று ஒன்றில் அருவியின் மீது நிறுவப்பட்டது. அதில், 130 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

  இந்திய விடுதலைக்கு 7 ஆண்டுகள் முன்னதாக, 1940-ல் எரிபொருள் தொடர்பாக, ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய திட்டக் கமிட்டி தான் மாநில மின் வாரியங்களைப் பரிந்துரைத்தது. சுய அதிகாரம் கொண்ட தன்னாட்சி அமைப்புகளாக மாநில மின் வாரியங்கள் இருக்க வேண்டும் என்று முடிவானது. இதற்காக மின்சாரம் சட்டம் 1948 இயற்றப்பட்டது. 1950-ல் டெல்லியில்தான் மாநில மின்வாரியம் தோன்றியது.

  இதையும் படிங்க - நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 42 பயணிகள் ரயில்கள் ரத்து!

  1950-களில் ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத் துறை அசுர வளர்ச்சி காண ஆரம்பித்தது. நீர், நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அடுத்தடுத்து முளைக்கத் தொடங்கின. அதன்பின் மாநிலங்களில் அடுத்தடுத்து பல மின் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.

  தமிழ்நாடு மின்சார வாரியம் 1957-ம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு மின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டில் முதன் முதலாக குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெச்.பி. குதிரைத் திறன் கொண்ட பம்புசெட் மோட்டாருக்கு மின் இணைப்புக்கு இலவச மின்சாரம் தரப்பட்டன. 1989 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு 5 ஹெச்.பி. குதிரைத் திறன் கொண்ட பம்புசெட் மோட்டார் வரை பயன்படுத்தி இலவச மின்சாரம் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. வீடுகளை பொறுத்தவரை 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

  1969-71-ம் ஆண்டில் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது உள்ளடங்கிய பகுதிகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அது தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள கிராமங்கள் அனைத்தும் மின் வசதி பெற்றிருப்பதற்கு அந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

  மணிப்பூர் மாநிலத்தின் லீசாங் கிராமம், 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில், மின் இணைப்பு பெற்றது. இதன் மூலம் இந்தியாவில் 5 லட்சத்து 97 ஆயிரத்து 464 கிராமங்களையும் மின்சாரம் எட்டியது. இந்தியாவில் மொத்தமாக சுமார் 37 கோடி குடும்பங்கள் உள்ளன. எனினும், ஒரு கிராமத்தில் 10 சதவீதம் வீடுகளுக்கு மின் வசதி இருந்தாலே, அந்த கிராமம் மின் இணைப்பு பெற்றதாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது.

  கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியாவின் அதிகபட்ச மின் தேவை என்பது 182.37 ஜிகாவாட் என்ற அளவில் இருந்தது. அதேநேரம், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தினசரி மின் தேவை சராசரியாக 187 ஜிகாவாட் என்ற அளவில் இருந்து வருகிறது. ஏப்ரல் 1-12 வரை 194 ஜிகாவாட் என்ற நிலையை எட்டியது. ஜூலையில் கோடைகாலம் உச்சத்தை தொடும் என்பதால் மின் தேவை கடந்த ஆண்டுகளை விட பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்..

  Published by:Musthak
  First published:

  Tags: Power cut