மார்ச் மாதத்தின் முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று ஹோலி. நமக்கு தெரிந்த ஹோலி திருவிழா என்றால் அது ஒருவரை ஒருவர் வண்ணங்களால் பூசி விளையாடும் வண்ணமயமான பண்டிகை என்பது மட்டும்தான். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் வித்தியாசமான லத்மார் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வரும் 8ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், மதுராவில் ஒரு வார காலத்துக்கு ‘லத்மார் ஹோலி’ எனப்படும் ஆண்களை பெண்கள் தடியால் அடித்து விரட்டும் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
ஹிந்தியில் 'லத்' , 'லத்தி' என்பது தடியைக் குறிக்கும். அதனால் தான் காவலர்கள் கையில் இருக்கும் தடிக்கு லத்தி என்று பெயர் வந்தது.'மார்' என்றால் கொலை, கொல்லுதல் என்று பொருள். அப்படி தடியால் அடித்து விளையாடப்படும் திருவிழா ஹோலிக்கு சில நாட்களுக்கு முன்பு தொடங்குகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான லத்மார் ஹோலி கொண்டாட்டம் மதுராவில் கோலாகலமாக தொடங்கிவிட்டது.
லத்மார் ஹோலியின் வரலாறு:
மத நம்பிக்கைகளின்படி, பர்சானாவில் லத்மார் ஹோலி பாரம்பரியம் மிகவும் பழமையானது. இது காவிய கால ராதா-கிருஷ்ணரின் அன்பின் அடையாளமாக கருதப்படுகிறது. துவாபர் சகாப்தத்தில், நந்தகோபலரின் மகனான கிருஷ்ணன் , ராதா மற்றும் பிற கோபியர்களுடன் ஹோலி விளையாட பர்சானாவுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது ராதாவும் அவரது தோழிகளும் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக ஹோலி பண்டிகையின் நடுவே தடியை வைத்து அடித்துள்ளனர். தாக்குதலைத் தவிர்க்க, கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் கேடயங்களைப் பயன்படுத்தினர். இந்த விளையாட்டு பழக்கம் தான் இன்று வரை கடைபிடித்து வருவதாக கூறுகின்றனர். இந்த பண்டிகைக்கு லத்மார் ஹோலி என்று பெயரையும் வைத்துள்ளனர்.
2023 ஆண்டிற்கான லத்மார் ஹோலி திருவிழா பிப்ரவரி 28 அன்று தொடங்கியது. இதற்காக பர்சனாவில் உள்ள ராதை கோயில் அருகே நடைபெற்ற விழாவில் ராதை போன்று வேடமிட்டு பெண்கள் கையில் தடியுடனும், ஆண்கள் கையில் கேடயத்துடனும் திரண்டனர். பெண்கள் குச்சிகளால், ஆண்களை தாக்க, பெண்களின் தாக்குதல் தங்கள் மீது படாதவாறு ஆண்கள் தடுத்து பின்வாங்கினர்.
இதையும் பாருங்க: படகு சவாரியுடன் ராமேஸ்வரத்தில் தீவு சுற்றுலா.. பட்ஜெட் செலவில் மாலத்தீவு சென்று வந்த ஃபீல் கிடைக்கும்..!
பின்னர் மக்கள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசி, ஆடிப் பாடி மகிழ்ந்தனர். ஒரு வார காலத்திற்கு நடைபெறும் இந்த வித்தியாசமான திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மதுராவில் குவிந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.