ஜம்மு காஷ்மீரில் வங்கியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வங்கி அதிகாரி கொல்லப்பட்டார். கடந்த 3 நாள்களில் நடைபெறும் இரண்டாவது தாக்குதல் இது.
குல்காம் மாவட்டத்தில் உள்ள எலகாஹி தேஹாதி வங்கி கிளையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பணியில் இருந்த வங்கியின் மேலாளர் விஜய் குமார் மீது குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்வராவார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண புகைப்பட ஆல்பம் கூட இன்னும் தயாராகவில்லை என விஜய் குமாரின் தந்தை ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
முன்னதாக ஜம்முவில் ரஜினி பாலா என்ற ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். சோபியான் மாவட்டத்தின் குல்காமில் அடுத்தடுத்து இந்துக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதேப்போல் பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க, சென்ற ராணுவத்தினரின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்தனர். காஷ்மீர் பண்டிட்டுகளின் மீதான தாக்குதலை கண்டித்து ஜம்முவில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். பண்டிட்டுகளை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தோக்ரா முன்னணி அமைப்பினரும், அவாமி அவாஸ் அமைப்பினரும் கண்டனங்களை பதிவு செய்யும் வண்ணம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க:
பிரதமர் மோடி தலைமையில் சிறு சிப்பாயாக பணியாற்றுவேன் - பாஜகவில் இணைந்த ஹார்திக் படேல்
பிரதமரின் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் சுமார் 4000 காஷ்மீர் பண்டிட்டுகள் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளை தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்ததால், அனைவரும் புலம் பெயர திட்டமிட்டுள்ளதாக பண்டிட்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடரந்து அவர்கள் வெளியேறாத வண்ணம், ஜம்மு நிர்வாகம் முகாம்களுக்கு சீல் வைத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.