முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவை இணைக்க உள்ள டாப்10 முக்கிய விரைவுச் சாலைகள்.. முழு விவரம் இதோ..!

இந்தியாவை இணைக்க உள்ள டாப்10 முக்கிய விரைவுச் சாலைகள்.. முழு விவரம் இதோ..!

விரைவுச் சாலைகள்

விரைவுச் சாலைகள்

top 10 india expressway | நாட்டின் வளர்ச்சிக்கு சாலை போக்குவரத்து மிகவும் முக்கியமான ஒன்று. அதனால்தான் சாலை கட்டமைப்பு விஷயத்தில் மத்திய அரசு மிக கவனம் செலுத்தி வருகிறது.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய சாலை வலையமைப்பைக் கொண்ட நாடு.  அமெரிக்காவும், சீனாவும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளன. இந்திய சாலை கட்டமைப்பின் வளர்ச்சி வேகம் அபரிமிதமானது, விரைவில் இந்தியா அமெரிக்கா மற்றும் சீனாவை மிஞ்சி முதல் இடத்தைப் பிடிக்கும்.

இந்தியாவின் சாலை நெட்வொர்க் ஒவ்வொரு பெரிய நகரத்தையும் அதன் தேசிய சாலைகள், நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் விரைவுச் சாலைகள் மூலம் சிறிய நகரத்துடன் இணைக்கிறது. SOS சாவடிகள், CCTV கண்காணிப்பு, வேக அளவீடு, போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் என  வரவிருக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் அனைத்து வசதிகளையும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேசத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும்  10 விரைவுச் சாலைகளை கட்டமைத்து வருகிறது அரசு. அது தொடர்பான விபரங்களை இப்போது பார்க்கலாம்

விரைவுச் சாலைகள் என்றால் என்ன? 

விரைவுச் சாலை என்பது அதிவேக வாகனங்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாலையாகும். மிகவும் திட்டமிட்ட, இடையூறுகள் இல்லாத சாலைப் பயணத்தை உறுதியளிப்பதற்காக விரைவுச்சாலைகள் கட்டமைக்கப்படுகின்றன. தற்போது, ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ்வே 302 கிலோ மீட்டர் நீளம் கொண்ட  இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையாக உள்ளது. இதே போல் நாடு முழுவதும் 10 எக்ஸ்பிரஸ் சாலைகள் கட்டமைக்கப்பட உள்ளன.

ரூ.1 லட்சம் கோடி மதிப்பீடு.. 12 மணி நேரத்தில் 1,386 கி.மீ.. இந்தியாவில் வருகிறது மிக நீண்ட விரைவுச் சாலை..!

1. டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே 

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி-மும்பை விரைவுச் சாலை உருவாக்கப்படுகிறது.  கிட்டத்தட்ட 1,350 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டமைத்து முடிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த விரைவுச் சாலையின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு 100 கி.மீ.க்கும், விபத்து சிகிச்சை மையம்,  93 ஓய்வு நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் இருந்து மும்பை செல்லும் இந்த சாலை 12 ஹெலிபேடுகள் கொண்ட முதல் எக்ஸ்பிரஸ் சாலையாகும். இந்த ஹெலிபேடுகள் மருத்துவ அவசரநிலை, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். விரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வரும்போது, டெல்லிக்கும் மும்பைக்கும் இடையிலான பயண நேரம் 12 மணி நேரமாக இருக்கும். இந்த திட்டத்தின் மொத்த செலவு 98 ஆயிரம் கோடி ரூபாய்.

2. துவாரகா விரைவுச் சாலை 

துவாரகா விரைவுச் சாலையானது இந்தியாவின் முதல் 29 கிலோ மீட்டர் நகர்ப்புற விரைவுச் சாலையாகும். டெல்லி-குர்கான் இடையிலான பயண நேரத்தை குறைப்பதற்காக அமைக்கப்படுகிறது.  18.9 கிலோ மீட்டர் குர்கானிலும்,  10.1 கிலோமீட்டர் டெல்லியிலும் அமைய உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம், சாலை விபத்துகள், மாற்றுப்பாதைகள், பாதை மாற்றங்கள் மற்றும் பணி மண்டலப் பகுதிகள் பற்றிய தகவல்களை வழங்க, இந்த சாலையில் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு பயன்படுத்தப்பட  உள்ளது. இந்த சாலைக்காந திட்ட மதிப்பீடு ரூ.9,000 கோடி

3. மும்பை-நாக்பூர் விரைவுச் சாலை 

இது மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைய உள்ள இரண்டாவது எக்ஸ்பிரஸ் சாலையாகும். ஏற்கனவே மும்பை-புனே விரைவுச்சாலை செயல்பாட்டில் உள்ளது.  701 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலை 390 கிராமங்கள் மற்றும் பத்து மாவட்டங்களை இணைக்கும். நாக்பூர், கல்யாண், ஔரங்காபாத், நாசிக், ஷீரடி, பிவாண்டி மற்றும் வார்தா ஆகிய முக்கிய நகரங்கள் இணைகின்றன.

மும்பைக்கும் நாக்பூருக்கும் இடையிலான பயண நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க இந்த அதிவேக நெடுஞ்சாலை உதவும். 55,000 கோடி செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது.  

விரைவுச் சாலைகள்

4. கங்கா விரைவுச் சாலை 

கங்கா விரைவுச்சாலை ஆறுவழி நெடுஞ்சாலைத் திட்டமாகும்.  இந்த விரைவுச் சாலை மீரட் மற்றும் பிரயாக்ராஜ் இடையே பயண நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரமாகக் குறைக்கும். இது மீரட்டில் உள்ள பிஜோலி கிராமத்தில் தொடங்கி பிரயாக்ராஜின் ஜூடாபூர் தண்டு கிராமத்தில் முடிவடைகிறது. இது பிரயாக்ராஜ், மீரட், உன்னாவ், புடான், சம்பல், சண்டௌசி, தில்ஹார், பங்கர்மாவ், ரேபரேலி, ஹாபூர் மற்றும் சியானா போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.திட்டத்தின் மொத்த செலவு ரூ 40,000 கோடி.

 5. டெல்லி-அமிர்தசரஸ் கத்ரா எக்ஸ்பிரஸ்வே 

டெல்லி- அமிர்தசரஸ் கத்ரா விரைவுச் சாலை 650 கி.மீ நீளம் கொண்டது. இது டெல்லியில் உள்ள பகதூர்கர் எல்லை வழியாக ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ரா வரை செல்கிறது. நோகாதர், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய முக்கிய நகரங்கள் இந்த சாலையால் இணைக்கப்படும். மேலும், இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் புனித நகரங்களான மாதா வைஷ்ணோ தேவி கோவில் மற்றும் பொற்கோயில் ஆகிய இரு புனித நகரங்களை இணைக்கும் இந்த நான்கு வழி விரைவு சாலை மத சுற்றுலாவை மேம்படுத்துகிறது. மருத்துவ அவசர சிகிச்சைகளுக்கான மையங்கள், அழைப்பின் பேரில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புத் வாகனங்கள், பொழுதுபோக்கு வசதிகள், போக்குவரத்து காவலர்கள், பேருந்து நிலையங்கள், டிரக் நிறுத்தங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகள் விரைவுச் சாலையில் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் முதல் பகுதி  25,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

6. அகமதாபாத் தோலேரா விரைவுச் சாலை 

அகமதாபாத்-தோலேரா விரைவுச்சாலை 2010 இல் அறிவிக்கப்பட்டது, ஆனால் அதற்கு 2019 இல் தான் அனுமதி கிடைத்தது. இந்த நான்கு வழி அகலமான விரைவுச் சாலை சர்கேஜில் உள்ள சர்தார் படேல் ரிங் ரோடு மற்றும் நவாகத்தில் உள்ள தோலேரா சர்வதேச விமான நிலையம் வரை செல்கிறது. இது தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தையும்  இணைக்கிறது. 109 கிமீ நீளமுள்ள இந்த  விரைவுச் சாலை சத்பவ் இன்ஜினியரிங், ஜிவிஹெச் இந்தியா மற்றும் டிஆர்ஏ இன்ஃப்ராகான் ஆகியவற்றால் கட்டமைக்கப்படுகிறது. திட்டத்தின் மொத்த செலவு: ரூ 3,000 கோடி.

7. பெங்களூர் - சென்னை விரைவுச் சாலை 

இது தென்னிந்தியாவில் வரவிருக்கும் ஒரு முக்கிய எக்ஸ்பிரஸ்வே ஆகும். தென்னிந்தியாவின் இரண்டு முக்கியமான நகரங்களை இந்த நான்கு வழி விரைவுச்சாலை இணைக்கிறது. கர்நாடகாவில் ஹோஸ்கோட் மற்றும் பங்கார்பேட், ஆந்திராவின் பலமனேர் மற்றும் சித்தூர் மற்றும் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் இடையே 260 கி.மீ நீளத்திற்கு அமைய உள்ளது இந்த சாலை. திட்டத்தின் மொத்த செலவு: ரூ.17,000 கோடி.

Delhi-Mumbai Expressway: 5 things to know about India's longest highway |  The Financial Express

8. ராய்ப்பூர் - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ்வே 

இந்த ஆறுவழி விரைவுச் சாலை 464 கி.மீ நீளம் கொண்டது.  இது மத்திய மற்றும் கிழக்கு-மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் வழியாக செல்கிறது. பயண நேரம் 14 மணி நேரத்திலிருந்து 7 மணி நேரமாகக் குறையும், மேலும் பயண தூரம் 590 கி.மீ தூரத்தில் இருந்து 464 கி.மீ ஆகவும் குறைக்கப்படும். 20 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

9. புந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே 

புந்தேல்கண்ட் விரைவுச் சாலை என்பது  புந்தேல்கண்டை டெல்லி NCR உடன் இணைப்பதற்காக அமைக்கப்படுகிறது. இது 296 கிமீ தூர சாலையாகும்.  திட்ட மதிப்பீடு ரூ.14,716 கோடி.

10. பூர்வாஞ்சல் விரைவுச்சாலை 

பூர்வாஞ்சல் விரைவுச் சாலை லக்னோவில் உள்ள சந்த் சராய் கிராமத்தில் தொடங்கி காஜிபூரில் முடிவடையும் 343 கிமீ சாலையாகும். இது பாரபங்கி, அமேதி, சுல்தான்பூர், அயோத்தி, மௌ மற்றும் அம்பேத்கர் நகர் போன்ற முக்கியமான மாவட்டங்கள் வழியாக செல்கிறது. இது வாரணாசி, அயோத்தி மற்றும் கோரக்பூர் போன்ற நகரங்களில் மத சுற்றுலாவை ஊக்குவிக்க பயன்படும். இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.22,496 கோடி ஆகும்.

First published:

Tags: Expressway, Road Safety