தெலங்கானாவில் உள்ள ஆண்கள் குழு ஒன்று, தங்கள் தலை வழுக்கையாக இருப்பதால், மாதந்தோறும் ₹6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தங்கள் தலை வழுக்கையாக உள்ளதால் அனைவரும் கிண்டல் செய்கின்றனர். இதனால் எங்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுகிறது என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
சினிமாக்களில் காட்டும் சில காமெடி காட்சிகளில் வழுக்கைத்தை தலையுடையவர்களை கிண்டல் செய்யும் போது நாம் சிரிப்பது உண்டு. ஆனால் இது நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுத்தி இருக்கும் சிக்கல்களை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தெலுங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்கள் சேர்ந்து சங்கம் அமைத்துள்ளனர். இந்த சங்கத்தில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பாலையா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவர் பதவியை ஏற்ற பாலையா தங்களது கோரிக்கை அடங்கிய அறிக்கை ஒன்றை மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு அனுப்பி உள்ளார்.
அந்த அறிக்கையில் அதில் அவர், 'சமூகத்தில் வழுக்கை தலையுடன் இருப்பவர்கள், கிண்டல் செய்யப்படுகிறார்கள். பல பிரச்னைகளையும், அவமானத்தையும் எதிர்கொள்கிறார்கள். அதிலும் சிறு வயதிலேயே பலருக்கும் வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. இவர்கள் 4 பேருடன் சேர்ந்து வெளியே செல்ல தயங்குகிறார்கள். வழுக்கை தலையுடன் இருப்பவர்களுக்கு திருமணம் நடப்பதும் கஷ்டமாக இருக்கிறது. வழுக்கை தலை இருப்பவர்கள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள்” என கூறியுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்டவர்கள், தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் ஓய்வூதியம் வழங்குகிறீர்கள். அதுபோல் வழுக்கை தலை உடையவர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்குள் ஓய்வூதியம் கொடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். தலைமைச்செயலகத்தை முற்றுகையிடுவோம்' என்று கூறியுள்ளார்.
மேலும் சங்கத்தின் உறுப்பினரில் ஒருவரான 41 வயதான பி அஞ்சி கூறுகையில், "மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் எங்களை காயப்படுத்துகின்றன. முடி குறைவதால் அவர்கள் சிரிக்கிறார்கள், இது எங்களுக்கு மன வேதனையைத் தருகிறது. எங்கள் வழுக்கை தலையை வைத்து அடிக்கடி கேலி செய்வது மிகவும் வேதனையாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
இந்த செய்தி நமக்கு வேடிக்கையாக தோன்றினாலும் எந்த அளவு பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இப்படியொரு சங்கம் அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள் என யோசிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. விளையாட்டுக்காக என்றாலும் ஒருவரின் உடலமைப்பை வைத்து அவர்களை கேலி செய்வது என்பது தவறான செயல் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.