தலைமறைவான பஜ்ரங்தள் தலைவர் - போலி புகாரால் தூண்டப்பட்டதா உ.பி. கலவரம் ?

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தர்ஷர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பசு இறைச்சி வெட்டியதாக பஜ்ரங்தள் தலைவர் குறிப்பிட்டவர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது.

news18
Updated: December 5, 2018, 10:15 PM IST
தலைமறைவான பஜ்ரங்தள் தலைவர் - போலி புகாரால் தூண்டப்பட்டதா உ.பி. கலவரம் ?
உத்தரப் பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்ட பஜ்ரங்தள் உறுப்பினர்கள்
news18
Updated: December 5, 2018, 10:15 PM IST
உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக பசு இறைச்சி வெட்டியதாக பஜ்ரங்தள் தலைவர் குறிப்பிட்டவர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று அக்கிராம மக்களும், காவலர்களும் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தர்ஷர் மாவட்டதிலுள்ள நாயாபன்ஸ் கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை(டிசம்பர் 3) சட்டவிரோதமாக பசு இறைச்சி வெட்டுகின்றனர் என்று அம்மாவட்ட பஜ்ரங்தள் தலைவர் யோகேஷ் ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், ‘காலை 9 மணி அளவில் நான், எனது நண்பர்கள் மூன்று பேருடன் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, ஏழு பேர் பசு இறைச்சி வெட்டிக் கொண்டிருந்தனர். நாங்கள் சத்தம் எழுப்புவதற்கு முன்னதாக அவர்கள் ஓடிவிட்டனர்’ என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய புகாரின் அடிப்படையில், திங்கள்கிழமை மாலையில் 70-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், நாயாபன்ஸ் கிராமத்துக்குச் சென்று அங்குள்ள இஸ்லாமியர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

மேலும், புகாரில் குறிப்பிட்டுள்ள ஏழு பேரைப் பற்றியும் விசாரித்தனர். விசாரணையின்போது, ஏழு பேரில் ஐந்து பேர் அந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக இல்லை என்று அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த இருவர் மட்டுமே கிராமத்தில் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் 11 மற்றும் 12 வயது மட்டுமே நிரம்பியிருக்கும் சிறார்கள். அவர்கள் இருவரையும் காவல்துறையினர், கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்று சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த அந்தச் சிறுவன், ‘நாங்கள், சிறையில் மிகக் கடுமையாக நடத்தப்பட்டோம். அப்போது, எனக்கு உடல்நிலை சரியில்லை. அதற்கு முன்னதாக நான் சிறைக்குச் சென்றதே இல்லை.

நாங்கள் 18 வயதைவிடக் குறைந்தவர்கள் என்று கூறியப் பிறகு ஆதார் கார்டைப் பார்த்த பிறகு எங்களை விட்டனர்’ என்று தெரிவித்தான். முன்னதாக, இறைச்சி வெட்டியதாக புகார் அளித்த பஜ்ரங்தள் மாவட்டத் தலைவர் யோகேஷ் ராஜ், குற்றம்சாட்டப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தும்போது அவர்களை உறுதிப்படுத்த களத்தில் இல்லை. சிறார்கள் கைது செய்யப்பட்டது குறித்தும், புகார் அளிக்கப்பட்ட மற்றவர்கள் யாரும் அந்தக் கிராமத்தில் இல்லாதது குறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேள்வி எழுப்பியபோது, பதில் கூற மறுத்துவிட்டார். முன்னதாக, கிராமத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோதுதான் அங்கே புகுந்த பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையை ஏற்படுத்தினர். அந்த வன்முறையில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் கொலை செய்யப்பட்டார். காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி என்று குறிப்பிடப்படும் பஜ்ரங்தள் தலைவர் யோகேஷ் ராஜ் தற்போது தலைமறைவாக உள்ளார்.

Also see:

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்