Ayodhya Verdict: அயோத்தி தீர்ப்பு: உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு!

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீர்ப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அயோத்தி காவல்துறை எச்சரித்துள்ளது.

Ayodhya Verdict:  அயோத்தி தீர்ப்பு: உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு!
அயோத்தி
  • Share this:
தீர்ப்பு வெளியாவதை ஒட்டி பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் அயோத்தி நகரம் கொண்டுவரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளதாக கூறப்படும் இடத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அயோத்தி முழுவதும் 12 ஆயிரம் காவலர்களோடு 4 ஆயிரம் துணை ராணவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் ஆளில்லா விமானங்கள் மூலம் அயோத்தி நகரமே கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அயோத்தி, லக்னோவில் ரோந்துக்காகவும், பாதுகாப்புப் படையினரை கொண்டு செல்லவும் இரு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. லக்னோவில் ஒரு விமானமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


அயோத்தி அருகே உள்ள 8 கல்லூரிகள் தற்காலிக சிறைச்சாலையாக மாற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீர்ப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அயோத்தி காவல்துறை எச்சரித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பவர்களின் கணக்குகள் முடக்கப்படுவதோடு, அவர்கள் மீது வழக்கு பதியப்படும் என்றும், அந்த பதிவை நீக்கினாலும் கூட வழக்கு பாயும் என்றும் டிஜிபி எச்சரித்துள்ளார்.அலிகார் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு 12 மணி வரை செல்போன் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மாவட்டத்தில் ஏற்கெனவே டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு முதல் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது பொது இடத்தில் 4 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் முழுவதும் 78 ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காணொளி காட்சி மூலம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட காவலர்கள் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
இரவு முழுவதும் விடிய விடிய உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 
First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்