அயோத்தி வழக்கில் 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

அயோத்தி வழக்கில் 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
அயோத்தி வழக்கு
  • Share this:
அயோத்தி வழக்கின் தீர்ப்பை இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளும் உற்றுநோக்கி வருவதால் தீர்ப்பு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010ம் ஆண்டு அளித்த தீர்ப்பை பார்ப்போம்.

ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அகர்வால், சர்மா, கான் அடங்கிய அமர்வு கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், கட்டடத்தின் உட்புற பகுதிக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று தெரிவித்த நீதிபதி அகர்வால், 200 ஆண்டுகளாக இந்த இடம் ஒரு மதத்தினரின் வழிபாட்டு தலமாக அழைக்கப்படுவதாக தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு தலத்தை இடித்தே மற்றொரு வழிபாட்டு தலம் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய நீதிபதி ஷர்மா, வக்பு வாரியத்தின் நிதி நிலவரத்தை பொருத்துமட்டும் அந்த இடம் முஸ்லீம்களுக்கு சொந்தமானது என்று கூறிவிட முடியாது என உத்தரவிட்டார். மசூதியின் உட்புற பகுதியில் உள்ள தூண்களில் இந்து கடவுள்களின் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளதால், இந்த கட்டடம் முஸ்லீம்களுக்கு சொந்தம் என்று யாராலும் சொல்லிவிட இயலாது என்றும் தெரிவித்தார்.


ஆனால் நீதிபதி கான், தனது உத்தரவில், பாபர் காலத்தில் மசூதி கட்டப்பட்டதற்கும், இந்து கோயிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதற்கு ம் எந்த ஆதாரமும் கிடையாது என்றார். யாரோ ஒருவரின் இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதால், அதனை முக்கியத்துவம் இல்லாத மசூதி என்று சொல்லிவிட முடியாது. கோயில் கட்டுமான பொருட்கள் அங்கு கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் எந்தளவுக்கு உண்மைத்தன்மையுள்ளது என்பதை சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார். இறுதியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகள் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என மூன்று நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமையாமல் மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியமும் அறிவித்தன. மேலும், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading