அயோத்தியில் குவிந்த இந்துத்துவ அமைப்பினர் - பலத்த பாதுகாப்பு

அயோத்தியில் குவிந்துள்ள இந்துத்துவ அமைப்பினர்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டம் வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் கொண்டுவரப்படும் என பாஜக எம்.பி ரவீந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் நடைபெறும் தர்மசபை நிகழ்ச்சிக்காக ஏராளமான வி.ஹெச்.பி. தொண்டர்கள் குவிந்துள்ளனர். 

அயோத்தியில் விரைந்து ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக,  நாளை அங்கு தர்ம சபை எனும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

அயோத்தியை சுற்றியுள்ள 200 கிலோ மீட்டர் தூரத்தை ஆயிரம் பகுதிகளாக பிரித்துள்ள இந்து அமைப்புகள், பேரணிகள், பைக் பேரணிகள், வீடுவீடாக சென்று பரப்புரை மேற்கொள்வது என முடிவு செய்துள்ளன. இதற்காக லட்சகணக்கான பக்தர்கள் அயோத்தியில் முகாமிட்டுள்ள நிலையில், 3000-க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அயோத்தி செல்கிறார். சன்னியாசிகளுக்கு மரியாதை செலுத்தும் அவர் மாலையில் சரயு நதியில் நடைபெறும் ஆராதனையில் பங்கேற்கிறார்.

உத்தவ் தாக்ரே அயோத்தி வரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ரவுத், 17 நிமிடங்களில் பாபர் மசூதியை இடித்த நிலையில், ராமர் கோவில் கட்டுவதற்கு இவ்வளவு நாட்களாகுவதாக வேதனை தெரிவித்தார். ராமர் கோவில் கட்டுவதற்காக பாஜக சட்டம் கொண்டு வருவதற்கு தாமதப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

Ayodhya-Temple | அயோத்தி
அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி


1992-ம் ஆண்டு அயோத்தியில் ஏற்பட்ட சம்பவம் போன்று மீண்டும் ஒரு சம்பவம் நிகழாமல் இருக்கும் வகையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவல்துறை கூடுதல் தலைவர் தலைமையில் 1000-க்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அயோத்தி நகரின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு ராணுவப் பாதுகாப்பு அளிப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டம் வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் கொண்டுவரப்படும் என பாஜக எம்.பி ரவீந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார். அது மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டால், அவசரச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் கூறினார்.

Also see... 
Published by:Vaijayanthi S
First published: