நன்கொடை வசூலிக்கும் போது விஸ்வ இந்து அமைப்பினர் கம்புகளுடனும், கத்திகளுடன் செல்வதா?: மோடிக்கு எழுதிய கடிதத்தில் திக்விஜய் சிங் சாடல்

திக்விஜய் சிங்.

இதுபோன்ற நிதிதிரட்டும், நன்கொடை வசூலிக்கும் பணியில், கையில் ஆயுதங்களுடன் பிற மதத்தினரை எரிச்சலூட்டும் வகையில், மோதலைத் தூண்டும் வகையில் செயல்படுவதை தடை செய்ய வேண்டும் என்கிறார் திக்விஜய் சிங்.

  • Share this:
    அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1.11 லட்சம் நன்கொடையாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் வழங்கியதோடு, அதற்கான காசோலையுடன் இரண்டு பக்க கடிதத்தையும் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார்.

    இந்து பரிஷத் அமைப்பும் தனியாக நன்கொடை வசூலிக்கும் பணியில் கடந்த 15-ம் தேதி முதல் ஈடுபட்டுள்ளது. 44 நாட்கள் பிரச்சாரம் செய்து ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூலிக்கும் பணியில் விஎச்பி அமைப்பு ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் ராமர் கோயிலுக்கு நன்கொடை அனுப்பிய திக்விஜய் சிங் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    கடந்த காலங்களில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வசூலித்தது அந்த பணத்தை என்ன செய்தார்கள், அதன் கணக்குவிவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும்.

    நன்கொடை வசூலிக்கும் போது, விஸ்வ இந்து அமைப்பினர் கையில் கம்புகளுடனும், கத்திகளுடன் செல்கிறார்கள். நன்கொடை வசூலிக்கும் செல்லும் இடங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக கோஷமிடுவது மதம்சார்ந்த நிகழ்ச்சியாக இருக்க முடியாது.

    இதுபோன்ற செயல்பாடுகள் சநாதன தர்மத்துக்கு விரோதமானது. இதுபோன்ற சம்பவங்களால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து, சமூக நல்லிணத்துக்கு தீங்கு ஏற்பட்டுள்ளது.

    மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைன், இந்தூர், மண்டாசூர் மாவட்டங்களில் ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூலிக்கும் பணியில் இருந்தபோது, மதரீதியான மோதல் வெடித்தது. மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு விரோதமாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    இதுபோன்ற நிதிதிரட்டும், நன்கொடை வசூலிக்கும் பணியில், கையில் ஆயுதங்களுடன் பிற மதத்தினரை எரிச்சலூட்டும் வகையில், மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் நன்கொடை வசூலிக்கும் பணியில் இருப்போருக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு நாட்டின் பிரதமராகிய நீங்கள் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published: